உடுமலை;உடுமலை ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில், நெரிசல் அதிகரித்து, போக்குவரத்து ஸ்தம்பிக்கும் பிரச்னைக்கு நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக அரசு கலைக்கல்லுாரி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு, அதிகளவு வாகனங்கள் செல்கின்றன.இதில், உழவர் சந்தை தாண்டியதும், அகல ரயில்பாதை குறுக்கிடுகிறது. அங்குள்ள ரயில்வே கேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில், அதிகளவு நெரிசல் ஏற்படுகிறது.உழவர் சந்தை சந்திப்பில் இருந்து ரயில்வே கேட் வரை, வரிசையாக தள்ளுவண்டி கடைகள் அமைத்துள்ளனர்; கேட் தாண்டியதும், ராமசாமிநகர் ரோடு சந்திப்பு துவங்கும் இடத்திலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.இந்த கடைகளுக்கு வரும் வாகனங்களை, ரோட்டின் மீதே நிறுத்தி விடுகின்றனர். இதனால், பிற வாகனங்கள் செல்ல அதிகளவு இடையூறு ஏற்படுகிறது.கேட் மூடப்படும் போது, இரு புறமும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடமில்லை. இதனால், அதிகளவு நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது; விபத்துகளும் ஏற்படுகிறது.தொடர்கதையாக உள்ள இப்பிரச்னைக்கு, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் கூறியதாவது: உழவர் சந்தை தாண்டியதும், உயர் மின் விளக்கு கோபுரத்தை ஒட்டியுள்ள சந்திப்பிலும், ரயில்வே கேட் ரோட்டிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்பு உள்ளதால், மேற்குப்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை.வேகத்தடை அருகிலும் வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை. ரோடு மிக குறுகலாக மாறியுள்ளது குறித்து ஆய்வு செய்து, முறைப்படுத்த வேண்டும்.இதே நிலை நீடித்தால், அப்பகுதியில் விபத்துகள் அதிகரிக்கும். அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.