கேட்வால்வு பழுது; வீணாகும் குடிநீர்
திருப்பூர்; கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் அருகே கேட்வால்வு பழுதாகி, 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி, ரோட்டில் பாய்ந்து வருகிறது. அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.திருப்பூர் மாநகராட்சி எல்லை பகுதியாக உள்ளதால், கோவில்வழி, பம்ப் ஹவுஸ், அமராவதிபாளையம், பெருந்தொழுவு ரோடு பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக செய்து தருவதில்லை. மேற்கண்ட பகுதியில், ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை, இரண்டு மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பிரச்னையால், அப்பகுதி மக்கள், குடிநீரை விலைக்கு வாங்கி பயன் படுத்தி வருகின்றனர்.கோவில்வழி - அமராவதிபாளையம் சாலையில், மெயின் குழாய் மற்றும் கேட்வால்வு உடைந்து, 24 மணி நேரமும் தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருகிறது. ஜன., மூன்றாவது வாரம் ஏற்பட்ட உடைப்பு, ஒரு மாதமாகி, இன்னமும் சரிசெய்யவில்லை. சாலையை ஒட்டியே குடிநீர் வீணாகி, அந்த இடமே குழியாகி விட்டது. பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வீணாவது குறித்து கவலையில்லாமல், மூன்று வாரங்களுக்கு மேலாகியும் அப்படியே விட்டுள்ளனர். குழாய் உடைப்பை சரிசெய்து, புதிய கேட்வால்வு பொருத்த வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.