விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ.122.99க்கு விற்பனை
உடுமலை : உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ- நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஏலத்திற்கு, எலையமுத்துார், சின்ன வீரம்பட்டி, கொமரலிங்கம், கப்பளாங்கரை, பொள்ளாச்சி, ஈரோடு, உடுமலை, பூலாங்கிணர், ஈரோடு, புக்குளம், விளாமரத்துப்பட்டி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 27 விவசாயிகள், 171 மூட்டை அளவுள்ள, 8,550 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.116.89 முதல், ரூ.122.99 வரையும், இரண்டாம் தரம், ரூ.94.71 முதல், ரூ.109.11 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும் ஏலத்தில், விவசாயிகளும், வியாபாரிகளும் அதிகளவு பங்கேற்று வருகின்றனர்.கூடுதல் விலை கிடைப்பதோடு, தொகையும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதால், விவசாயிகள் அதிகளவு வருகின்றனர். அதே போல், கொப்பரை முறையாக தரம் பிரிக்கப்பட்டு, ஏலத்திற்கு வைக்கப்படுகிறது.வெளிமார்க்கெட்டில் விற்றால், ஒரே மாதிரியான விலை கிடைக்கும் நிலையில், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தரத்திற்கு ஏற்ப விலை கிடைப்பதால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.உடுமலை பகுதிகளில் உற்பத்தியாகும் கொப்பரை அதிக தரம் உள்ளதாகும். இ - நாம் திட்டத்தின் கீழ் நடப்பதால், தஞ்சாவூர், காங்கயம், அவல்பூந்துறை, ஈரோடு என பல்வேறு பகுதிகளிலுள்ள நிறுவனங்கள் பங்கேற்று, போட்டியின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கும் போது, விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நிறுவனங்களில் கொப்பரை இருப்பு இல்லாத நிலையில், தேவை அதிகரிப்பு காரணமாக, விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.