கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கலாம்
பல்லடம் : தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், கிராமங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒருபகுதியாக குற்றவாளிகளை கண்டறிவது மட்டுமன்றி, திருட்டு, வழிப்பறி மற்றும் விபத்து உள்ளிட்ட வழக்குகளின்போதும், ஆதாரங்களை சேகரிப்பதிலும், 'சிசிடிவி' கேமராக்களே, போலீசாருக்கு பெரிதும் உதவுகின்றன. பல்லடம் அருகே, சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில், விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக, 14 தனிப்படைகள் அமைத்து, போலீசார் தேடி வந்த போதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால், குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது.சமீப காலமாக, கிராமப் பகுதிகளை குறி வைத்து குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. 'சிசிடிவி' கேமராக்கள் இருந்திருந்தால், குற்றவாளிகளை கண்டறிவதில் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்காது. வருவாய் குறைந்த கிராமப் பகுதிகளில், ஆயிரக்கணக்கில் செலவு செய்து, சிசிடிவி., கேமராக்கள் பொருத்துவது என்பது இயலாது. இதற்கு மாற்றாக, சி.எஸ்.ஆர்., எனப்படும், தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்தி கிராம பகுதிகளில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கலாம்.கம்பெனிகளின் சட்டப்படி, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், 2 சதவீத நிதியை சமூக பங்களிப்புக்காக ஒதுக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. கல்வி, குடிநீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், சமூகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்நிதியை பயன்படுத்தி கிராம பகுதிகளில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைப்பதன் மூலம், கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். திருப்பூர் மாவட்டத்தில், கோடிக்கணக்கில் ஏற்றுமதி நடக்கும் பனியன் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இதை செயல்படுத்துவது மிக எளிது. மாவட்ட நிர்வாகம், போலீசார் இது குறித்து ஆலோசித்து, கிராமங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.