உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆட்டிசம் குழந்தைகளுக்கு உண்டு அற்புதமான வாழ்க்கை

ஆட்டிசம் குழந்தைகளுக்கு உண்டு அற்புதமான வாழ்க்கை

திருப்பூர், ; 'ஆட்டிசம் குழந்தைகள் இயற்கையோடு ஒன்றி வாழ விடுங்கள்; இதனால், அவர்களது பல்வேறு பிரச்னைகள் சீராக வாய்ப்பு உள்ளது' என, ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் 'சக் ஷம்' அமைப்பு சார்பில், 'ஆட்டிசம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் வரவேற்றார்.விழிப்புணர்வு தேவைசாய்கிருபா சிறப்பு பள்ளி நிறுவனர் கவின் பேசியதாவது:ஆட்டிசம் குழந்தைகள் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பரந்த குணங்கள், பண்புகளை வெளிப்படுத்துவர். அவர்களுக்கு, பார்த்தல், கேட்டல், தொடு உணர்வு என எல்லாமுமே சவாலானது. இவர்களை இயற்கையோடு தொடர்புபடுத்தி வைக்கும்போது, ஏராளமான பிரச்னைகளை சரி செய்ய வாய்ப்பு உள்ளது. நம் நாட்டில் நகரங்களைவிட கிராமங்களில், ஆட்டிசம் குழந்தைகள் இயற்கையோடு ஒன்றி வாழ்வது சாத்தியமானதாகிறது; ஆனால், நகரங்களைவிட, கிராமங்களில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பெற்றோரிடம் குறைவாக இருக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளை தனிமைப்படுத்தக்கூடாது.அவர்களுக்கு, சமூகத்தோடு ஒன்றி வாழ்வதிலும், தான் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிப்பதும்தான் பிரச்னையாக உள்ளது. நம்முடன் தொடர்பு கொள்வதற்காகவே, கத்துவது, அடிப்பது, குதிப்பது போன்ற செயல்களை வெளிப்படுத்துகின்றனர். வெறுமனே 'தெரபி' மட்டும் அளித்தால் போதாது; அக்குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.ஊக்கப்படுத்துங்கள்அர்த்தமுள்ள செயல்பாடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். காய்கறி வெட்டுவது, துணி முறுக்கி பிழிய வைப்பது உள்பட வீட்டு வேலைகள் கற்றுக் கொடுக்கவேண்டும். இது அவர்களது செயல்திறனை மேம்படுத்துவதோடு, சிறந்த தெரபியாகவும் அமையும். படித்து, பார்த்து, கேட்டு கற்றுக்கொள்ள முடியாததால், பெற்றோர்தான், நேரடி செயல் விளக்கமாக சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆட்டிசம் குழந்தைகளை குறைத்து எடைபோடக்கூடாது. ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமை ஒளிந்திருக்கிறது. அதை வெளிக்கொண்டுவர தேவையான பயிற்சிகள் அளிக்கவேண்டும்.கருத்து பரிமாற்றம்பாரதி வித்யாஸ்ரமம் குழந்தைகள் சிறப்பு பள்ளி நிறுவனர் ஆடிட்டர் ராமநாதன் பேசியதாவது:ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர், வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை, தங்கள் குழந்தைகளுடன் ஓரிடத்தில் கூடவேண்டும். குழந்தைகள் குறித்த தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள வேண்டும். இதனால், பெற்றோரின் கவலைகள் குறைவதோடு, குழந்தைகளை மேலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெறமுடியும். சாய் கிருபா சிறப்பு பள்ளியில், ஆட்டிசம் குழந்தைகளுக்கு பல்வேறுவகை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகளுக்கு பயிற்சி தேவைப்படுவோர், அணுகலாம். ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு தேவையான எல்லா உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க, தயாராக உள்ளோம்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருப்பூரை சேர்ந்த ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்றனர். 'சக் ஷம்' மாவட்ட தலைவர் ரத்தினசாமி நன்றி கூறினார்.----'ஆட்டிசம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: (இடமிருந்து) 'சக்ஷம்' மாவட்ட தலைவர் ரத்தினசாமி, சாய்கிருபா சிறப்பு பள்ளி நிறுவனர் கவின், மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியர் கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார், பாரதி வித்யாஸ்ரமம் குழந்தைகள் சிறப்பு பள்ளி நிறுவனர் ஆடிட்டர் ராமநாதன்.இதில் பங்கேற்ற பெற்றோர், குழந்தைகள்.

திறன் கண்டறியுங்கள்

''ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையில் தனித்திறன் பெற்றிருக்கின்றனர். ஆட்டிசம் குழந்தைகளின் திறனை கண்டறிந்து, பெற்றோர் ஊக்கப்படுத்தவேண்டும். அவர்கள் பிடித்தவற்றை செய்யவேண்டும்; அவர்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டும். இதனால் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந்து, அதுவே சிறந்த முன்னேற்றத்துக்கு படிக்கல்லாக அமைய வாய்ப்பு உள்ளது'' என்றார்,கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரி, உளவியல் துறை உதவிப்பேராசிரியர் தமிழ்ச்செல்வன்.

இது நோயல்ல

''ஆட்டிசம் என்பது நோயல்ல; இது ஒரு குறைபாடு. சிலர் ஆட்டிசத்தை முழுமையாக சரிசெய்வதாக தவறாக விளம்பரப்படுத்துகின்றனர். ஆட்டிசத்தை முழுமையாக சரி செய்துவிட முடியாது. ஆனால், அவர்களது வாழ்க்கையை அவர்கள் சுயமாக வாழும் அளவுக்கு கொண்டு வந்துவிடமுடியும். தவறான விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை வீணாக்கி விடக்கூடாது. குழந்தைகளுக்கு சின்னச்சின்ன வேலைகளை கற்றுக்கொடுப்பது, அவர்களது எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது'' என்றார்,திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மன நலத்துறை உதவிப்பேராசிரியர் டாக்டர் கலைச்செல்வி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ