வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதே போல் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமங்களை மாற்ற திட்டம் தேவை. சாலைகளின் இரு மருங்கிலும் அடர்ந்த பச்சை மரங்கள் வளர்ப்பது கட்டாயம் ஆக்கணும். மழை நீர் சேமிப்பு உபகரணங்கள் ஒவ்வொரு தெருவிலும் கட்டாயம் நிறுவனம்
ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலை பிரதானமாக கொண்ட திருப்பூரில், 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். திருப்பூருக்கு, சர்வதேச தரத்துக்கு இணையான 'பசுமை நகரம்' என்ற சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியில், தொழில் அமைப்புகள் முனைப்புக் காட்டி வருகின்றன. இதற்கு, திருப்பூர் மாநகராட்சியும், தன் பங்களிப்பை வழங்குவதாக உறுதி பூண்டுள்ளது.பசுமை நகரம் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நகர்ப்புற சூழலை உள்ளடக்கியது. எதிர்கால சந்ததியினருக்கு, வாழ தகுதியுள்ள ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும். அதாவது, சுத்தமான காற்று, சுகாதாரமான நீர், பசுமை சூழ்ந்த குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்பதே, பசுமை நகரங்களுக்கான தகுதிகள். இதற்கு பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரின் ஒத்துழைப்பு அவசியமானது. ஒரு நகரம் பசுமை நகரம் அங்கீகாரம் பெற, எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த அலசல்: மாசு இல்லாத சூழல்
காற்று மாசு தவிர்க்கப்பட்டு, சுத்தமான காற்றை மக்கள் சுவாசிக்க வேண்டும். மாசுபாடு இல்லாத சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட நீர், வழங்கப்பட வேண்டும். வாகனங்களின் பேரிரைச்சல் தரும் ஹாரன் சப்தம் உள்ளிட்ட ஒலி மாசு தவிர்க்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும். இயற்கை வளங்கள்
நகரின் உள்ள வீடுகள், சாலையோரங்கள் மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் மரம் வளர்த்து, அவை நிரந்தரமாக, நிழல் பரப்பும் பசுமைப் போர்வையாக மாற்றப்பட வேண்டும். இவ்வாறு, பசுமையை பாதுகாப்பதன் விளைவாக, மாவட்டத்தின் காலநிலை மாற்றம் என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும். பல்லுயிர் பெருக்கம்
வனம், அது சார்ந்த பகுதிகள், குளம், குட்டை, நீரோடை மற்றும் நீர்வழித்தடங்களை பராமரித்து, அதன் இயல்பு கெடாமல் பாதுகாக்க வேண்டும். அதன் வாயிலாக, சிறிய புல் இனம் துவங்கி, பூச்சி இனங்கள் வரையிலான இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு, அவை பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு
மக்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில், மக்கள் இளைப்பாற பசுமை சூழல் நிறைந்த பூங்காக்கள், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சைக்கிள் பயணம் மேற்கொள்ள பிரத்யேக பாதை உள்ளிட்ட, மக்களின் உடற்பயிற்சிக்கான மற்றும் மன அழுத்தம் குறைப்பதற்கான அம்சங்கள் இடம் பெற வேண்டும். பொருளாதார மேம்பாடு
பசுமை நகரங்களில் சோலார், காற்றாலை மற்றும் நீர் மின்னாற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, அந்த நகரங்களின் பிரதான தொழில்களில் மாசு தவிர்க்கும் பசுமை தொழில்நுட்பங்களை புகுத்துவதும்; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் ஊக்குவிக்கப்படுகிறது. அதோடு, சுற்றுலா, அது சார்ந்த பொருளாதாரமும் ஊக்குவிக்கப்படுகிறது. நீர் மேலாண்மை
அரசு கட்டடங்கள் மற்றும் வீடுகளில், மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்; நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட நீர் பாதுகாப்பு மேலாண்மை அவசியம். கழிவு மேலாண்மை
வீடு உள்ளிட்ட வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகளை பிரித்தெடுப்பது; மக்கும் குப்பையை உரமாக்குவது, மக்காத குப்பையை மறுசுழற்சி செய்வது; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட நவீன திடக்கழிவு மேலாண்மை முறை பின்பற்றப்பட வேண்டும். பசுமை போக்குவரத்து
கார், டூவீலர் உள்ளிட்ட தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைத்து, பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பது; அதற்கேற்ப, மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், சைக்கிள் வாயிலாக நகர வீதிகள் மற்றும் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று வர வசதியாக, சாலையோரம் பிரத்யேக பாதை அமைக்கப்பட வேண்டும்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், 'ஜ.ஜி.பி.சி.,' எனப்படும் இந்திய பசுமை கட்டடங்கள் கவுன்சில், பசுமை கட்டட சான்றிதழ் வழங்கி வருகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வீடுகள், ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றுக்கும் பசுமை கட்டட சான்று வழங்கப்படுகிறது.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழலுடன் கூடிய கட்டுமானமாக இருக்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்களை பயன்படுத்தியிருக்க வேண்டும்; நீர் சிக்கனம் மேம்படுத்தும் வகையில் குழாய்கள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்பு இருக்க வேண்டும்.மின் சிக்கனத்துக்கு உதவும் வகையிலான மின்சாதன பொருட்கள், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்குரிய கட்டமைப்பு, கட்டட வளாகங்களில் பசுமை சூழும் தாவர, செடி கொடிகள்; புல்வெளிகளுடன் கூடிய தரை தளம், செயற்கை நீரூற்று, மருத்துவ நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட உடல் நலனுக்கு கேடு விளைவிக்காத வண்ணங்கள் பூசப்பட்ட சுவர், காற்றோட்டம் நிறைந்த உட்புற மற்றும் வெளிப்புற சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட்டு, தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.இது, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, பசுமை கட்டட கவுன்சிலின் விதிமுறைக்கு உட்பட்டு வீடுகளை கட்டும் போது, தனி நபர் கூட பெற முடியும். அந்த அடிப்படையில், திருப்பூருக்கு பசுமை நகர சான்றிதழ் பெறும் முயற்சியில், இந்திய தொழிற்கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பசுமை கட்டடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மாநில அரசும் ஒத்துழைப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கீகரிப்பது யார்?
பசுமை நகரங்களை உருவாக்குவதில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் சார்பில், 2016 முதல் துாய்மை நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. பசுமை அல்லது துாய்மை நகரங்களை உருவாக்கும் நோக்கில் தான் மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி, அம்ருத், தேசிய நகர்ப்புற புத்துணர்வு திட்டம் உள்ளிட்டவற்றை ஊக்குவித்து, நிதி ஒதுக்கீடும் வழங்குகிறது. அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் டாப் 10 பசுமை நகரங்களாக, இந்துார் (ம.பி.,), சூரத் (குஜராத்), நவி மும்பை (மகாராஷ்டிரா), அம்பிகாபூர் (சத்தீஸ்கர்), மைசூரு (கர்நாடகா), விசாகப்பட்டினம் (ஆந்திரா), ஆமதாபாத் (குஜராத்), புதுடில்லி மற்றும் சந்திரபூர் (மஹாராஷ்டிரா) ஆகியன உள்ளன.
இதே போல் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமங்களை மாற்ற திட்டம் தேவை. சாலைகளின் இரு மருங்கிலும் அடர்ந்த பச்சை மரங்கள் வளர்ப்பது கட்டாயம் ஆக்கணும். மழை நீர் சேமிப்பு உபகரணங்கள் ஒவ்வொரு தெருவிலும் கட்டாயம் நிறுவனம்