உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுத்தமானது அமராவதி கால்வாய்; விவசாயிகள் போராட்ட அறிவிப்பால் அற்புதம்

சுத்தமானது அமராவதி கால்வாய்; விவசாயிகள் போராட்ட அறிவிப்பால் அற்புதம்

உடுமலை; உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, பிரதான கால்வாய் வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையிலிருந்து, 64 கி.மீ., துாரம் அமைந்துள்ள அமராவதி பிரதான கால்வாய், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, கான்கிரீட் கரைகள், சிலாப்கள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட மடைகள் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. இந்நிலையில், மடத்துக்குளம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில், அமராவதி பிரதான கால்வாய் கரை குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு, மலைபோல் கழிவுகள் குவிந்திருந்தன. பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் போது, கழிவுகள் கால்வாய் நீரில் சரிந்தும், பிளாஸ்டிக் கழிவுகள், துணி, ரப்பர் உள்ளிட்ட திடக்கழிவுகள் நீரில் அடித்து வரப்பட்டு, மடைகள் அடைப்பு ஏற்பட்டு வந்தது. மேலும், மது பாட்டில்கள் உடைந்து, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கால்வாய் கரையிலுள்ள குப்பை, கழிவுகளை அகற்ற வேண்டும், என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தாலுகா செயலாளர் வீரப்பன், கடந்த, 10ம் தேதி நடந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்தார். மாவட்ட கலெக்டர், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்; அகற்றாவிட்டால், நீர் வளத்துறை கழிவுகளை அகற்றி, உரிய செலவு தொகையை பேரூராட்சி நிர்வாகத்திடம் வசூலித்துக்கொள்ள உத்தரவிட்டார். இதனையடுத்து, கடந்த வாரம் கால்வாய் கரை குப்பை கிடங்கிற்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள், கழிவுகளை அகற்றாமல், அகழ்வு இயந்திரம் வாயிலாக, கழிவுகளை அடையாளம் தெரியாமல் கரை முழுவதும் பரப்பி விடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் முழுமையாக அகற்ற வேண்டும்; பரப்பி விடக்கூடாது; பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை முழுமையாக அப்புறப்படுத்தாவிட்டால், நாளை (19ம் தேதி) அமராவதி பிரதான கால்வாயில் இறங்கி, குப்பை அகற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதனையடுத்து, நேற்று காலை வந்த மடத்துக்குளம் பேரூராட்சி அதிகாரிகள், குவித்து வைத்திருந்த கழிவுகளை, வாகனங்கள் வாயிலாக வேறு பகுதிக்கு ஏற்றிச்சென்றனர். மேலும், கால்வாய் முழுவதும் தேங்கியிருந்த பிளாஸ்டிக், துணி உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முழுமையாக அகற்ற வேண்டும்; இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

பி.ஏ.பி.,க்கு எப்போது தீர்வு?

பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வாயிலாக, 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இக்கால்வாய் கரையில், ஜல்லிபட்டி, போடிபட்டி, பள்ளபாளையம், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், பெரிய கோட்டை ஊராட்சிகளில் சேகரமாகும் கழிவுகள் கொட்டி, கரை வழிநெடுகிலும் குப்பை கிடங்குகளாக மாறியுள்ளது. இதனால், மடைகளில் அடைப்பு ஏற்பட்டு, பாசன நீர் வழிந்து வீணாவது, மடைகளில் பிளாஸ்டிக், துணி கழிவுகள் தேங்கி, பாசன நிலங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படுவது, பாசன நீர் முழுவதும் சுகாதார கேடு ஏற்படுத்துவது என பல்வேறு பாதிப்புகள் நீடித்து வருகிறது. இதே போல், பி.ஏ.பி.,கால்வாய் கரையில் அமைந்துள்ள குப்பை கிடங்குகளை மாற்றவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை