தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் இளந்தென்னை நடவு விவசாயிகளுக்கு மானியம்
உடுமலை: மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், புதிதாக தென்னை நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், பொள்ளாச்சியிலும் தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவசாயிகளுக்கு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அவ்வகையில், மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தமிழகத்தில் தென்னை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், தென்னை பரப்பு விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், இளந்தென்னை நடவு செய்யும் விவசாயிகளுக்கு, நெட்டை ரகத்திற்கு, ஹெக்டேருக்கு, ரூ.6,500, குட்டை ரகத்திற்கு, ரூ.7,500, வீரிய ஒட்டு ரக கலப்பின ரகத்திற்கு, 6,750 ரூபாய் வழங்கப்படுகிறது.ஒரு விவசாயி, அதிகபட்சமாக, 4 ஹெக்டேர் வரை, 700 தென்னங்கன்றுகள் நடவு செய்ய, நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற, www.coconutboard.gov.inஎன்ற இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகல், போட்டோ, சிட்டா, அடங்கல், வங்கி பாஸ்புத்தக முன்பக்க ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் அருகிலுள்ள, தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.அவர்கள் ஆய்வு செய்து, மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு அனுப்பி வைத்ததும், வாரியம் சார்பில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.தென்னங்கன்றுகள், வேளாண் பல்கலை, தென்னை வளர்ச்சி வாரிய நாற்றுப்பண்ணைகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் நாற்றுப்பண்ணைகளில் கொள்முதல் செய்து, அதன் ரசீதையும் இணைக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, தளி தென்னை மகத்துவ மையம் 04252- 265430 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மத்திய தென்னை வளச்சி வாரிய மண்டல இயக்குனர் இள அறவாழி, தளி திருமூர்த்திநகர் மத்திய தென்னை மகத்துவ மைய உதவி இயக்குனர் ரகோத்துமன் தெரிவித்தனர்.