தேங்காய் விலை உயர்வு: நீர் மேலாண்மையை சரிவர கையாளவில்லை! அரசு மீது தென்னை விவசாயிகள் குற்றச்சாட்டு
பொங்கலுார்: தமிழகத்தில் கொங்கு மாவட்டத்தில் தான் தென்னை விவசாயம் அதிகம். இங்கு தென்னைக்கு உயிர்நாடியாக இருப்பது பி.ஏ.பி., திட்டம் ஆகும். கடந்தாண்டு கேரளாவில் மழை குறைவால் பாசனத்திற்கு இரண்டு சுற்று தண்ணீரே கிடைத்தது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்தது. கோடை மழையும் சரிவர செய்யவில்லை.நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்ததால் முன்கூட்டியே தண்ணீரை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தாமதமாக திறக்கப்பட்டது. இதனால், பல்லாண்டு தாவரமான தென்னையில் குரும்பைகள் உதிர்ந்தது. தற்போது தேங்காய் வரத்து மிகவும் குறைந்துள்ளது. தோப்புகளில் ஒரு காய் 20 ரூபாய்க்கும், உழவர் சந்தையில், 25 ரூபாய்க்கும் விலை போகிறது. கடுமையான விலை உயர்வு இருந்த போதிலும் வரத்து குறைந்துள்ளதால் அதன் பயனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்று விவசாயிகள் குமுறுகின்றனர். தென்னை விவசாயிகள் சிலர் கூறியதாவது: தென்னை விளைச்சலை பருவ மழையே தீர்மானிக்கிறது. கடந்த ஆண்டு மழை இல்லாத சூழ்நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தி தென்னைக்கு ஓரளவு பாசனம் செய்தோம். அதனால், இதுவரை தேங்காய் வரத்து இருந்தது. தேங்காய் விளைச்சலை ஒரே நாளில் உயர்த்தி விட முடியாது. மூன்று ஆண்டில் முடிக்க வேண்டிய கான்டூர் கால்வாய் பணியை ஜவ்வாக இழுத்து, தண்ணீர் இருந்தும் அதனை திறக்காமல் அரசு செயற்கை வறட்சியை உருவாக்கியது. இதனால் பல இடங்களில் தென்னை குருத்து வரை காய்ந்துள்ளது. பச்சை தேங்காய் வரத்து சரிவால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முன்கூட்டியே தண்ணீர் திறந்திருந்தால் வறட்சியை சமாளித்திருக்கலாம். தேங்காய் விலை உயர்வுக்கு நீர் மேலாண்மையில் அரசு சொதப்பியதே முக்கிய காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.