முத்துக்குமாரசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
பல்லடம்: பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கொடியேற்றத் துடன் நேற்று துவங்கியது.வரும், 7ம் தேதி கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், கந்தசஷ்டி துவக்க விழா, நேற்று காலை, 4.00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் கோவிலை சுற்றி வளமாக எடுத்துவரப்பட்டு, முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், காப்பு அணிந்து விரதம் துவக்கினர். வரும், 7ம் தேதி மாலை, 5.30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8ம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன், காப்பு அணிந்தவர்கள் விரதத்தை முடிப்பர்.