நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு
திருப்பூர்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் கடித்து ஆடு, கோழி உள்ளிட்டவை பலியாகி வரும் நிலையில், இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, சட்டசபை கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில், விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்து, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை தெரு நாய்கள் கடிக்கின்றன. இதில், நுாற்றுக் கணக்கான ஆடு, கோழிகள் இறந்துள்ளன. 'இறந்த கால்நடை களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம், முற்றுகை என, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.அதன் விளைவாக, 'இறந்த ஆடுகளுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது' என, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதியளித்தனர். அதன் விளைவாக, விவசாயிகள், தங்களது போராட்டத்தை நிறுத்தி, பொறுமை காத்து வருகின்றனர். ஈரோடு, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இப்பிரச்னை தென்பட்டது.தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், 'இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும்' என, விவசாய சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்துவது என்பது, சவாலான பணியாக மாறியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில், அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்; அதுவரை, நாய்களின் தாக்குதலுக்கு பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், விவசாய அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.