மாநில சிறார் திரைப்பட போட்டி வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
உடுமலை,; சிறார் திரைப்பட போட்டியில், மாநில அளவில் வெற்றி பெற்ற, இலுப்பநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிக்கு, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், வினாடி- வினா மற்றும் சிறார் திரைப்பட மன்றங்கள் செயல்படுகின்றன.இந்த மன்றங்களின் வாயிலாக, மாணவர்களுக்கு அவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள் பள்ளி அளவில் துவங்கி, மாநில அளவிலான போட்டிகள் வரை நடத்தப்படுகிறது.இதன் அடிப்படையில், சிறார் திரைப்பட மன்றத்தின் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவில் பயிற்சி பட்டறை நடந்தது.இதில் குடிமங்கலம் ஒன்றியம் இலுப்பநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி இனியா, சிறார் திரைப்பட கதைக்காக இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிக்கு, வட்டார கல்வி அலுவலர் ரோஜாவானரசி, பள்ளி தலைமையாசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.