ரூ.40 கோடியில்... மினி டைடல் பார்க் கட்டடம்
அவிநாசி: திருமுருகன்பூண்டி அருகே கட்டப்பட்டு வரும், மினி டைடல் பார்க் கட்டடப் பணியை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.திருமுருகன்பூண்டி நகராட்சி, கூப்பிடு விநாயகர் கோவில் அருகே, 40 கோடி ரூபாய் செலவில், 9 அடுக்கு கட்டடமாக மினி டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:பூண்டியில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகளை, டிச., மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். அந்த மகிழ்ச்சியான அறிவிப்பு எப்போது வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளோம். பவள விழா கொண்டாடி வரும் தி.மு.க., மக்கள் பேராதரவுடன் நூற்றாண்டு விழாவும் கொண்டாடும். ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகாது.திருவள்ளுவர் பிறந்த தினம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் சட்டப்படி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஆதாரங்களில் உண்மை தன்மை குறைவு என செய்திகள் வந்துள்ளது.இவ்வாறு அமைச்சர் பேசினார்.நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் (டைடல் பார்க்) பாஸ்கரன், பூண்டி நகராட்சி தலைவர் குமார், ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனிசாமி, நகர செயலாளர்கள் கிருஷ்ணசாமி (பூண்டி), வசந்தகுமார் (அவிநாசி) உட்பட பலர் பங்கேற்றனர்.