தொடர் பயிற்சி; கைகூடிய வெற்றி கபடியில் சாதித்த சிங்கப்பெண்கள்
சேலத்தில் நடந்த மாநில சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற, திருப்பூர் மாவட்ட கபடி அணி, அசத்தலான ஆட்டம் ஆடி, எதிரணியை பந்தாடி, வெற்றிக்கனிகளை பறித்தது.காலிறுதி போட்டியில், கரூர்; அரையிறுதியில் திருவள்ளூர் அணியை வீழ்த்திய திருப்பூர் அணி இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த சென்னை அணியுடன் திருப்பூர் அணி மோதியது. இறுதிப்போட்டியில்திக்... திக்... திக்
இறுதிப்போட்டியில், கடைசி நிமிடம் வரை போராடினாலும், ஆட்ட முடிவில், 26 - 26 என புள்ளிகள் சமனானது. கூடுதல் நேர ஒதுக்கீட்டில் சென்னை அணி பலம் காட்டியது; அடுத்தடுத்து புள்ளிகள் குவித்த போதும், கடைசியில் திருப்பூர் அணி சுதாரிக்க கூடுதல் நேர புள்ளியும், 5 - 5 சமமானது. மூன்றாவது வாய்ப்பாக, டாஸ் மூலம் யார் ரெய்டு என முடிவெடுக்கப்பட்டது.'டாஸ்' திருப்பூர் அணிக்கு சாதகமானது. கேப்டன் கதிஜாபீவி அசத்தலாக ஆட்டம் ஆடி வெற்றிப்புள்ளியை பெற்றார். கடந்த 2009ம் ஆண்டுக்கு பின், திருப்பூருக்கு கோப்பை கிடைத்தது. தமிழக அணிக்குதேர்வான இருவர்
சாம்பியன்ஷிப் வென்ற அணிக்கு பாராட்டு விழா, திருப்பூர் கபடி கழகத்தில் சிறப்பாக நடந்தது. மாநில சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் அசத்தி, தமிழக அணிக்கு தேர்வாகியுள்ள திருப்பூர் வீராங்கனைகள் கதீஜாபீவியும், புவனேஸ்வரியும் மஹாராஷ்டிராவில் நடைபெறவுள்ள பெடரேஷன் கோப்பை கபடி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் பெற்றது குறித்து கதீஜாபீவி, புவனேஸ்வரி கூறியதாவது:விடாமுயற்சி, வெற்றி பெற்று விடுவோம் என்ற தன்னம்பிக்கை ஆட்டம் துவக்கம் முதலே இருந்தது. பிற அணிகளை விட நன்றாக விளையாட வேண் டும் என்ற எண்ணம் அணியினர் அனைவருக்கும் இருந்தது. ஆறு ஆண்டு கால கடின உழைப்பால், போட்டியில் ஒவ்வொரு நிமிடமும் முதலிடம் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடினோம். அடுத்த இலக்குநோக்கி பயணம்
தொடர் பயிற்சியே, வெற்றியை சாத்தியமாக்கியது. பயிற்சியாளர், அணி மேலாளர் நல்ல ஊக்கம் அளித்தார். பலமுறை சீனியர் சாம்பியன்ஷிப்பில் தோல்வி அடைந்த போதும், துவளாமல், அணி வீராங்கனைகளுக்கு நிறைய உதவிகளை கபடி சங்கத்தினர் செய்துள்ளனர். அவையெல்லாம் சாதிக்க உதவியது.ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்த தேசிய கபடி போட்டியில் விளையாடி காலிறுதி வரை சென்ற அனுபவம், கைகொடுத்தது. அடுத்து, பெடரேஷன் கோப்பையில் சாதிக்க பயிற்சி எடுத்து தயாராகி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.