நொய்யல் பாலம் அணுகுசாலை அமைத்ததில் சர்ச்சை
திருப்பூர்: ''ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் பாலத்தில் அணுகுசாலை முறையாக அமைக்கப்படவில்லை'' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், திருப்பூர், ஈஸ்வரன் கோவில் அருகே நொய்யலாற்றின் குறுக்கில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பாலம் இடித்து அகற்றப்பட்டு, அங்கு புதிய உயர்மட்டப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.நொய்யல் தென்புறத்தில் முத்துசாமி ரோடு, ஈஸ்வரன் கோவில் ரோட்டில் இணையும் வகையில் பாலம் துவங்குகிறது. வடபுறத்தில் நொய்யல் கரை மின் மயான ரோடு, யூனியன் மில் ரோடு, யுனிவர்சல் சந்திப்பு ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில், இப்பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. திடீர் உயரம்
வடபுறம் பாலம் வந்து சேரும் அணுகு சாலையின் அமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அணுகு சாலை உயர்மட்டப்பாலம் இணையும் வகையில் இல்லாமல், ரோட்டில் உள்ள மையத் தடுப்பு அமைப்பில் குறுகலான இடத்தில் திடீரென உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.மூன்று ரோடுகள் வழியாக வரும் வாகனங்கள் பாலம் மீது ஏறி கடந்து செல்ல, உயரமான பகுதியைக் கடக்க வேண்டியுள்ளது. பாலத்தின் உயரத்துக்கு ஏற்ப ரோட்டில் நீண்ட துாரத்துக்கு சாய்வாக ரோடு அமைக்க வேண்டும். அதை விடுத்து குறைந்த தொலைவில் மிக உயரமாக ரோடு அமைக்கப்பட்டுள்ளது. என்ன நோக்கம்?
அருகேயுள்ள தனியார் கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற தனிப்பட்ட நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து, ரோட்டின் மட்டத்தை ஆய்வுக்குட்படுத்தி உரிய வகையில் மாற்றம் செய்ய வேண்டும். வடக்கு நோக்கி பாலம் மீது வரும் வாகனங்கள் யுனிவர்சல் ரோடு திரும்புவதும் பெரும் இடையூறாக அமையும் நிலை உள்ளது.பாலம் கட்டுமானப் பணி முடிந்த பின்தான், வழக்கமாக அணுகு சாலைகள் தார் ரோடாக அமைக்கப்படும். பல இடங்களில் நீண்ட நாட்கள் இந்த அணுகு சாலை அமைக்கும் பணி கண்டு கொள்ளாமலே விடப்படும்.ஆனால் இந்த பாலம் மீது மட்டும் அணுகு சாலை மீது தார் ரோடு போடும் பணியைத் துவங்கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்தும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.