மாநகராட்சி பாதை விவகாரம்; கட்டட வரைபட அனுமதி ரத்து
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 9வது வார்டு, 15 வேலம்பாளையம், சிறுபூலுவபட்டி பகுதியில், 13 ஆயிரம் சதுர அடி பரப்பில், தொழிற்சாலை கட்டடம் கட்ட தனியார் ஒருவர் விண்ணப்பம் செய்தார். கடந்த மே மாதம் உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதி வழங்கியது. இந்த இடத்துக்குச் செல்லும் பாதை, மாநகராட்சிக்கு சொந்தமானது இல்லை என்று, மாநகராட்சி தரப்பில் உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு கடிதம் அளிக்கப்பட்டது. இதனால், கட்டட வரை பட அனுமதியை உதவி இயக்குனர் சாதிக் அமீர் ரத்து செய்தார். கட்டட அனுமதி பெறப்பட்ட இடம் வேலம்பாளையம் கிராமம், க.ச.எண்: 565ல் உள்ளது. இதற்கான வழித்தடம் 565, 583 மற்றும் 584 ஆகியவற்றில் சப்-டிவிஷனில் உள்ளதாக, வடக்கு தாசில்தார் வாயிலாக பெறப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த சப்-டிவிஷன் பணி, மார்ச்சில் முதல் மண்டல உதவி கமிஷனர் அளித்த கடிதத்தின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மாநகராட்சி சார்பில், உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு அனுப்பிய கடிதத்தில், மாநகராட்சிக்கு இந்த பாதை ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இடத்தை யார் எப்போது யாரிடம் ஒப்படைப்பு செய்தனர் என்ற தகவல் இல்லை. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஏன் இது குறித்து உரிய விசாரணை மற்றும் கள ஆய்வு நடத்தவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. எனவே, இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த பிரச்னை குறித்து விளக்கம் பெற, நில அளவை பிரிவு உதவி இயக்குனர், மாநகராட்சி உதவி கமிஷனரை தொடர்பு கொண்ட போது இருவரும், மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை.