உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விசாரணைக்கு வந்த ஆசாமி ஓட்டம் மடக்கிப்பிடித்த கோர்ட் ஊழியர்கள்

விசாரணைக்கு வந்த ஆசாமி ஓட்டம் மடக்கிப்பிடித்த கோர்ட் ஊழியர்கள்

திருப்பூர், ; திருப்பூர் - அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லையில் நடந்த வழிப்பறி சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டவர் ஸ்ரீதர், 35. இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஸ்ரீதர் ஆஜராகாமல் இருந்து வந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் மீதான விசாரணைக்கு ஆஜராக அவர் நேற்று காலை கோர்ட்டுக்கு வந்தார். நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் குற்றவாளி ஸ்ரீதர் ஆஜரானார்.அப்போது, நீதிபதி ஸ்ரீதர், தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதால் உங்களை ஏன் கைது செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். அச்சமுற்ற ஸ்ரீதர் கோர்ட்டிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஓட்டம் பிடித்தார். இரண்டாவது தளத்திலிருந்த கோர்ட் வளாகத்திலிருந்து ஓட்டம் பிடித்த அவரை, கோர்ட் ஊழியர்களும் போலீசாரும் துரத்திச் சென்று பிரதான நுழைவாயில் அருகே மடக்கிப் பிடித்தனர்.பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் வீரபாண்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில்நேற்று சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி