விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டி; பங்கேற்க வேளாண்துறை அழைப்பு
உடுமலை : உடுமலை வட்டார விவசாயிகள், மாநில, மாவட்ட அளவில் நடக்கும் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க பதிவு செய்து கொள்ளலாம், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:உடுமலை வட்டார வேளாண் துறை, மாநில வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியானது 'நெல் உற்பத்தி திறனுக்கான விருது'க்கு, நெல் சாகுபடியில், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களைக்கடைபிடித்த, மாநில அளவில் அதிக உற்பத்தித்திறன் பெறும் விவசாயிக்கு, ரூ.5 லட்சம் சிறப்புப்பரிசும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.திருந்திய நெல் சாகுபடியில் கொடுக்கப்பட்டுள்ள, 2 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 'பாரம்பரிய நெல் ரகங்களுக்கான பாதுகாவலர் விருது' வழங்கப்படுகிறது.தற்பொழுது துாயமல்லி பாரம்பரிய நெல் நமது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், மிக குறைந்த விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நுழைவுக்கட்டணம், ரூ.150 ஆகும்.குறைந்த பட்சம், 2 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய வேண்டும். அதிக உற்பத்தித்திறன் பெற்ற விவசாயிக்கு முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக, 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.மேலும் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பிற பயிர்களான கம்பு, உளுந்து, பச்சைப்பயறு, கரும்பு பயிர்களுக்கான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படுகிறது.முதல் பரிசு ரூ.2.5 லட்சம், இரண்டாம் பரிசு, ரூ.1.50 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ. ஒரு லட்சம் ஆகும். இவற்றுக்கு, நுழைவுக் கட்டணம், ரூ. 150 செலுத்தி விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியானது, மக்காச்சோளம் பயிரில் நடத்தப்பட உள்ளது. இதற்கு, முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 5 ஆயிரம் ஆகும். நுழைவுக் கட்டணம் ரூ.100 ஆகும்.பரிசு பெற ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளும், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, பதிவு செய்து பரிசுகளை பெறலாம், என உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.