உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு பஸ்களில் இன்று கூட்டம் அதிகரிக்கும்

சிறப்பு பஸ்களில் இன்று கூட்டம் அதிகரிக்கும்

திருப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்கம் நேற்று துவங்கியது. முதல் நாள் என்பதால், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 35, கோவில்வழியில் இருந்து, 40 சிறப்பு பஸ்கள் இயக்கம் மட்டும் துவங்கப்பட்டது. நேற்று பெரும்பாலான பள்ளிகள், கல்லுாரிகள் நாள் முழுதும் செயல்பட்டன. கடந்த வாரமே போனஸ் வழங்கினாலும், பண்டிகைக்கு முன் ஆர்டர்களை முடிக்க வேண்டிய நிர்பந்தம் என்பதால், நேற்றும் 80 சதவீத பனியன் நிறுவனங்கள் இயங்கின. ஆகையால், பஸ்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. சிறப்பு பஸ் இயக்க குழுவினர் கூறுகையில், 'முதல் நாள் என்பதால், நேற்று பகலில் கூட்டம் குறைவாக, இருந்தது. இன்றும், நாளையும் (19ம் தேதி) நாள் முழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளோம். போதிய அளவில் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் தயாராக உள்ளது. சிறப்பு பஸ்கள் குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், பயணிகள் சிறப்பு மற்றும் இயக்க குழுவில் உள்ள அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்,' என்றனர். நேற்று கூட்டம் குறைவாக இருந்த நிலையில், இன்று, காலை மற்றும் மதியம் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை அதிகரிக்கவும், இரவு துவங்கி, திங்கட்கிழமை காலை முழு அளவில் சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று இரவு துவங்கி, நாளை மாலை வரை அதிகளவில் பயணிகள் வெளியூர் செல்வார் என்பதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. அறிவிப்புக்கு ஏற்ப முடிவு அரசு, தனியார் கல்லுாரிகளை பொறுத்த வரை இன்று முதல், 21ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கல்லுாரிகள், 22ம் தேதி முதல் செயல்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளிகள் இன்று முதல், 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை காலண்டர் 2025ன் படி, வரும், 21ம் தேதி வேலை நாளாக உள்ளது. அரசு தரப்பில் இருந்து ஏதேனும் அறிவிப்புகள் வரும் போது அதற்கேற்ப மாறுதல்கள் இருக்கும். தற்போதைக்கு, சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து, திங்கள்கிழமை (தீபாவளி) மூன்று நாள் விடுமுறையென நேற்று மாவட்ட கல்வித்துறை அறிவித்தது. அதே நேரம், தனியார் பள்ளிகள், செவ்வாய்கிழமை (21ம் தேதி) சேர்த்து, நான்கு நாட்கள் பள்ளிகள் விடுமுறையை நேற்று மாலையே அறிவித்து விட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை