மரத்துகள், கரித்துண்டுகளால் பாதிப்பு; மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்
பல்லடம்; பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மரத்துகள்களை பயன்படுத்தி மாற்று உபயோகப்பொருள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. நேற்று மாலை இந்நிறுவனத்தை இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் முற்றுகையிட்டனர்.பொதுமக்கள் கூறியதாவது: நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் மரத்துகள்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. கரித்துகள்கள் மற்றும் மர துகள்கள், விளை நிலங்கள், பயிர்களில் படிந்து பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.கால்நடைகளும் இவற்றால் நோய்வாய்ப்படுகின்றன. வெளியேற்றப்பட்ட கரித்துண்டுகள், நீர்வழிப் பாதையில் கொட்டப்பட்டுள்ளன. இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலரது கண்களை மரத்துகள்கள் பதம் பார்த்ததில், பொதுமக்கள் பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தால், 'விடுமுறையில் உள்ளோம்; வந்து பார்க்கிறோம்' என, அலட்சியத்துடன் பதிலளிக்கின்றனர். ஒரு வாரம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக இந்நிறுவனத்தை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கோடங்கிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் ஊராட்சி செயலர் கண்ணப்பன் ஆகியோர், நிறுவனத்தை நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் முறையிடலாம் என உறுதி கூறி, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.