இரவினில் ஆட்டம்... பகலினில் சேட்டை... உயிரையும் வேட்டை
புகார்கள் வந்தவுடன் கண்காணிப்பும், நடவடிக்கையும் அமையு மானால், குற்றங்கள் குறையும். இது, நேர் மாறாக அமையும் போது, கொலையும் கூட நடக்கும். இதுதான், குமரானந்தபுரத்தில் நடந் திருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள்.கடந்த 25ம் தேதி அதிகாலை நிசப்தம், மரண ஓலத்துடன் விடிகிறது. வீட்டை விட்டு வெளியே வந்த, ஓரிரு நிமிடங்களில் 30 வயது பாலமுருகனின் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டது.ஹிந்து முன்னணி வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினரான அவரை, ஒரு கும்பல் வெட்டிச் சாய்க்கிறது. கைது செய்யப்பட்டவர்களும், தேடப்படும் நபர்களும் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். சிலர் மீது அடிதடி, தகராறு மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. அமர்க்கள மைதானம்
இப்பகுதியில் உள்ள மைதானத்தில் தினமும் இரவு மற்றும் வார இறுதி நாட்களில் கும்பல் திரள்கிறது. மது அருந்துதல், ஆபாசமான வார்த்தைகளை பேசுதல், நீண்ட நேரம் குழுமியிருத்தல் என மைதானம் இரவில் அமர்க்களப்படுகிறது. போதையில் வாலிபர்கள் மோதி கொள்வது; மது பாட்டிலை போதையில் உடைப்பதெல்லாம் இங்கு சகஜம்.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:மைதானத்தை சிறியவர் முதல் பெரியவர் வரை கிரிக்கெட், வாக்கிங் செல்வது என, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த சிலர் ஒன்றாக சேர்ந்து கொண்டு, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள போதே மது அருந்துவது, போதையில் ஆபாசமாக பேசி, மோதி கொள்வது போன்று மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடக்கின்றனர். இது பொதுமக்களுக்கு பட்டப்பகலிலேயே பயத்தை உருவாக்கியிருக்கிறது. நள்ளிரவு 'அட்ராசிட்டி'
இவர்களை வழிநடத்தும் சிலர் அதே பகுதியை சேர்ந்த செல்வாக்கு உள்ள நபர்கள் என்பதால் தங்களை முன்னிலைப்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நள்ளிரவில் அரட்டை என்ற பெயரில் சத்தம் போடுவது, மொபைல் போனில் பாட்டு போட்டு நடனம் ஆடுவது என 'அட்ராசிட்டி' செய்கின்றனர். இவை, மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது. தெரிந்தும் தெரியாது
புகார் சென்றாலும், கட்சி செல்வாக்குள்ள சிலர் தலையீடுகளால் போலீசார் வந்த வேகத்தில் திரும்பி விடுகின்றனர். இதுபோன்று பிரச்னையெல்லாம்இங்கு நடக்கிறது என்று இப்பகுதி ஸ்டேஷனை சேர்ந்த கடை நிலை போலீசார் முதல் உயரதிகாரி வரை என, அனைவருக்கும் தெரியும்.இனியாவது போலீசார் உஷாராக கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். - நமது நிருபர் -