இருள் சூழ்ந்த சுரங்க நடைபாதை
திருப்பூர்; திருப்பூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் செயல்படும் பகுதியில் உள்ள சுரங்க நடைபாதை விளக்கு இன்றி இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.திருப்பூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே, ஜெய்வாபாய் பள்ளி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள வளாகம் அருகே, ரயில்வே பாதையின் கீழ் அமைந்துள்ள சுரங்க நடை பாலத்துடன் அமைந்துள்ளது. ஜெய்வாபாய் பள்ளி ரோட்டையும், காலேஜ் ரோட்டையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்க நடைபாலம் உள்ளது.நீண்ட காலமாக இந்த பாலம் வழியாக பாதசாரிகள் கடந்து சென்று வந்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களும் இதைப் பயன்படுத்தி வந்தன. அதன் பின்னர் உரிய பராமரிப்பின்றி இந்த பாலம் அமைந்துள்ள பாதையில் அடைப்பு ஏற்பட்டது.சில ஆண்டுகளாக இந்த சுரங்க பாதை பாதசாரிகள் கூடப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாண்டுகள் முன் இந்த இடத்தில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ., செல்வ ராஜ் இதை சீரமைப்பு செய்து பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்தார். அதன் பின் பொதுமக்கள் இதை பயன்படுத்த துவங்கினர்.இந்த பாதையில் ஜெய்வாபாய் பள்ளி ரோடு முதல் மறுபுறம் காலேஜ் ரோடு அடையும் வரை தெரு விளக்குகள் எதுவும் இல்லை. இந்த பாதை இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால், மாலை நேரத்துக்குப் பின் பாதை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.தெரு விளக்குகள் அமைத்து இருள் நீக்கினால் மட்டுமே பாதையைப் பயன்படுத்த முடியும்.