அமராவதி அணையில் மீன் பிடிப்பு சரிவு : சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சிக்கல்
உடுமலை: உடுமலை அமராவதி அணையில், நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதாலும், பருவ மழை, இரவு நேரங்களில் குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக, மீன் வரத்து குறைந்துள்ளது. உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணையில், மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. வளர்ந்த மீன்கள், 20க்கும் மேற்பட்ட பரிசல்களில், மீனவர்கள் வாயிலாக, பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அணையில் தினமும், சராசரியாக, 550 கிலோ வரை மீன் பிடிக்கப்படும். கடந்த இரு மாதமாக அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்ட நிலையில், தற்போது மழை பொழிவு அதிகரிப்பு, மாலை நேரங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, இரவு நேரங்களில் குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக, மீனவர்கள் வலை விரிக்க அணைக்குள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, மீன்களும் சிக்குவதில்லை. இதனால், அணையில் மீன் பிடிப்பு பெருமளவு குறைந்து, தற்போது, 150 கிலோ வரை மட்டுமே மீன்கள் சிக்குகின்றன. அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர்மட்டம், 76 அடிக்கு மேல் உள்ளதோடு, காற்று அதிகரிப்பு, பனி பொழிவு, இரவு நேரங்களில் குளிர் சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களினால், மீனவர்கள் வலை விரிப்பதிலும், மீன்கள் பிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மீன் வரத்து பெருமளவு குறைந்துள்ளது,' என்றனர்.