காய்கறி சந்தையில் இறைச்சி கடைகள் ஆக்கிரமிப்பு தனி மையம் அமைக்க வலியுறுத்தல்
உடுமலை ;உடுமலை நகராட்சி சந்தை பகுதிகளில், இறைச்சிக்கூடங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆடு வதைக்கூடம் முறையாக பயன்படுத்தப்படாததால் வீணாக உள்ளது. இறைச்சி விற்பனைக்கு என தனி வளாகம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகராட்சி சந்தைக்கு, சுற்றுப்புற பகுதிகளிலுள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். தினமும், 700 டன் காய்கறிகள், விவசாயிகள், பல்வேறு மாவட்ட வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.அதே போல், சந்தை வளாகத்திலேயே, தினசரி சந்தையும் செயல்படுவதால், 400க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. தினமும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதோடு, திங்கட்கிழமைகளில் வாரச்சந்தையும் நடக்கிறது.பிரதானமாக உள்ள நகராட்சி வளாகத்தில், ராஜேந்திரா ரோடு வணிக வளாகம் பகுதியில், மாடு, ஆடு, மீன், கோழி என, 50க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் அமைந்துள்ளன. காய்கறி, மளிகை கடைகளுக்கு மத்தியில், சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.இதனால், விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, காய்கறி சந்தை வளாகம் முழுவதும் இறைச்சிக்கடைகள் கொண்ட வளாகமாக மாறியுள்ளதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். வீணாக ஆடு வதைக்கூடம்
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் வகையிலும், பொது இடங்களில் ஆடு, மாடு அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நகராட்சி ஆடு வதைக்கூடத்தில், கால்நடை மருத்துவரால் ஆய்வு செய்து, அதற்கு பிறகே, ஆடு அறுக்கப்பட்டு, சீல் வைத்து விற்பனை செய்ய வேண்டும். இதற்காக, உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில், ஆடு வதைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், இறைச்சிக்கடைகளில், அங்கேயே ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு, பொது இடங்கள், மழை நீர் வடிகால்களில் ரத்தம், கழிவுகள் வீசப்படுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, தரமான, சுகாதாரமான இறைச்சி பொதுமக்களுக்கு கிடைப்பதும் கேள்விக்குறியாக உள்ளது.பொது இடங்களில், கால்நடைகள் வெட்டுவதை தடுக்கவும், ஆடு வதைக்கூடம் முழுமையாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி அதிகாரிகள், நகராட்சி பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகளை வரை முறைப்படுத்தவும், நகராட்சி பகுதியில், இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஒரே பகுதியில் அமையும் வகையில், தனி வளாகம் அமைக்க வேண்டும்.