உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துணை முதல்வர் ஆய்வு; அதிகாரிகள் ஆயத்தம்

துணை முதல்வர் ஆய்வு; அதிகாரிகள் ஆயத்தம்

திருப்பூர்: வரும் 19ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திருப்பூர் வரவுள்ளார். அன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், அரசு துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின், திருப்பூர் மாவட்டத்துக்கு உதயநிதி வரும் 19ம் தேதி முதன் முதலாக வருகிறார்.வரும் 18ம் தேதி கோவை வரும் அவர் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு மற்றும் ஆலோசனை நடத்தவுள்ளார். அடுத்த நாள் 19ம் தேதி காலை 9:00 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில், கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவாக அமைக்கப்பட்டுள்ள நுாலகத்தை திறந்து வைக்கிறார். சட்டசபை தொகுதிவாரியாக, இளைஞர் அணி சார்பில், தலா ஒரு நுாலகம் அமைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், உடுமலை இளைஞர் அணி சார்பில் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ள நுாலகத்தை திறந்து வைக்கிறார்.அதன் பின் திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள டி.ஆர்.ஜி., திருமண மண்டபத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசவுள்ளார். இந்நிகழ்ச்சி அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது.பின், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்யவுள்ளார்.இதற்காக கடந்த இருநாட்களுக்கும் மேலாக மாவட்ட அளவிலான அனைத்து துறைகளிலும் துறைரீதியான செயல்பாடுகள், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகியன குறித்த அனைத்து புள்ளி விவரங்கள் சேகரித்து அறிக்கை தயார் செய்யும் பணியில் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.காலை முதல் பிற்பகல் வரை இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்தான் மதிய உணவுக்கே அவர் கோவை திரும்புகிறார். அன்று இரவு சென்னை திரும்பும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.,வினர் ஏமாற்றம்துணை முதல்வர் பொறுப்பேற்ற பின்னர் திருப்பூர் வரும் உதயநிதி திருப்பூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் இருந்தது. ஆனால், அடுத்த முறை திருப்பூர் வரும் போது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ