நகராட்சியில் வளர்ச்சி பணி; அமைச்சர் ஆய்வு
காங்கேயம், காங்கேயம் நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் சூர்யபிரகாஷ் முன்னிலை வைத்தார். நகராட்சி ஆணையர் பால்ராஜ், காங்கேயம் நகர செயலாளர் சேமலையப்பன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் அமைச்சர் பேசியதாவது: காங்கேயம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மூன்று பணிகள், ௧4.11 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. முதல்வரின் காலை உணவு திட்டத்தில் சமையலறை கட்டும் பணி, 34 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் மற்றும் பஸ் நிறுத்த நிழற்கூடை, 77 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பள்ளி மேம்பட்ட திட்டத்தில் ஆறு அரசு பள்ளிகள், 52 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிக்கும் பணி, சிறுவர் நுாலகம் திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 26 பணிகள், 1.28 கோடி ரூபாய் மதிப்பு என, 87 பணிகள், 81.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சியில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டு, பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.