உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று காப்பு அணிந்து விரதம் துவக்கும் பக்தர்கள்

இன்று காப்பு அணிந்து விரதம் துவக்கும் பக்தர்கள்

திருப்பூர்: முருக பக்தர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான கந்தசஷ்டி விழா, இன்று காப்பு அணியும் நிகழ்வுடன் துவங்குகிறது. முருகப்பெருமான், சஷ்டி விரதம் இருந்து, திருச்செந்துார் கடற்கரையில், சூரனை வதம்செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், தீபாவளிக்கு மறுநாளில் இருந்து கந்தசஷ்டி விழா துவங்குகிறது. பக்தர்கள், காப்பு அணிந்து, ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவர். அதன்படி, இந்தாண்டு கந்தசஷ்டி விழா இன்று காப்பு அணியும் நிகழ்வுடன் துவங்குகிறது. திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், அலகுமலை பாலதண்டாயுத முத்துக்குமாரசாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் என, சுப்பிரமணியர் கோவில் இருக்கும் அனைத்து இடங்களிலும், கந்தசஷ்டி விழா இன்று துவங்குகிறது. இன்று காலை, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு மகா அபி ேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, காலை அல்லது மாலை, பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவக்க உள்ளனர். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும். வரும், 27ம் தேதி மாலை சிறப்பு பூஜை, அன்னை பார்வதி தேவியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, சூரசம்ஹாரம் நடைபெறும். பக்தர்கள், கோவிலில் வழங்கும் அபிேஷக பால் மட்டும் அருந்தி, பழங்களில் ஏதாவது ஒன்றை மட்டும் சாப்பிட்டு, ஆறு நாட்கள் விரதம் இருக்க உள்ளனர். சூரசம்ஹாரம் முடிந்து, மோரில் ஊறவைத்த வாழைத்தண்டு பிரசாதம் வழங்கப்படும். வரும், 28ம் தேதி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். தினம் ஒரு வண்ணப்பூ திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் சுப்பிரமணியருக்கு, தினமும் ஒவ்வொரு வண்ண மலர்களால் அலங்காரம் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று, வெள்ளை மலர் அலங்காரம், நாளை மஞ்சள் நிறம், 24ம் தேதி, சிவப்பு, 25ல் நீலம், 26ல் சிவப்பு, 27ம் தேதி பச்சை, 28ம் தேதி பல்வகை மலர்களால் அலங்காரம் நடைபெற உள்ளது. கொங்கணகிரி கோவில் திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி ஸ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி கோவிலில், 15ம் ஆண்டு கந்தசஷ்டி சூர சம்ஹார திருகல்யாண விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று காலை 9:00 - 10:00 மணிக்குள் கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 6:00 - மதியம் 12:00 மணிவரை பக்தர்களுக்கு விரத காப்பு அணிவிக்கப்படுகிறது. 27ம் தேதி மாலை 4:30 மணிக்கு ஸ்ரீகந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம், வேல் பூஜை நடைபெறும். மாலை சூரசம்ஹார விழா நடந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில், 28ம் தேதி காலை 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, 9:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் தினசரி கந்த பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, ஹிந்து அறநிலையத்துறை, ஆண்டிபாளையம் ஆறுபடை முருக பக்தர்கள் குழு, அணைப்பாளையம் ஊர் பொது மக்கள், கொங்கனகிரி தீர்த்த அபிஷேக குழு, ஆண்டிபாளையம் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ