அவிநாசியில் அம்மன் தேரோட்டம் தேர் வடம் பிடித்து பக்தர்கள் உற்சாகம்
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.திருவிழாவில், 8 மற்றும் 9ம் தேதியில் பெரிய தேர் எனப்படும் அவிநாசியப்பர் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று காலை 10:47 மணிக்கு ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் தேரோட்டம் துவங்கியது.பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து பிற்பகல் 2:40 மணிக்கு நிலை சேர்த்தனர். அம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் உள்ள மண்டபங்களிலும் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், அறக்கட்டளைகள் சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அம்மன் தேரைத் தொடர்ந்து ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர் உற்சாகத்துடன் இழுத்தனர். அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் தேரும் ரத வீதிகளில் பவனி வந்தது.தேரோட்டத்தை முன்னிட்டு டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், எஸ்.ஐ.,க்கள் என, 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தனியார் மருத்துவ முகாம்கள், தீயணைப்பு துறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள், பல்வேறு அறக்கட்டளைகள் பக்தர்களுக்கான சேவை பணிகளில் ஈடுபட்டன்.