துணைவன் இணையதள சேவை கருத்தரங்கு
திருப்பூர்; ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், 'துணைவன்' இணையதள சேவை தொடர்பான வழிகாட்டி கருத்தரங்கு, 1ம் தேதி திருப்பூரில் நடக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், ஏ.இ.பி.சி., சார்பில், சுங்கத்துறை தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், 'துணைவன்' என்ற இணையதள சேவை உருவாக்கப்பட்டது. கடந்த ஜூன் 12ல் திருப்பூரில் அறிமுக விழா நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு, 'துணைவன்' இணையதள சேவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறப்பு வழிகாட்டி கருத்தரங்கு, வரும் 1 ம் தேதி நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கும் கருத்தரங்கில், ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் தலைமை வகிக்கிறார். திருச்சி சுங்கச்சாவடி கூடுதல் கமிஷனர் விஜயகிருஷ்ண வேலவன், 'துணைவன்' இணையதள சேவை தொடர்பாக விளக்கி பேசுகிறார். ஏற்றுமதியாளர்கள், சுங்கவரித்துறை தொடர்பான கோரிக்கை மற்றும் சேவைகளை எளிதாக பெற, 'துணைவன்' இணையதள சேவையை பயன்படுத்தலாம். கருத்தரங்கில் பங்கேற்று, இதுதொடர்பான சந்தேகங்களை கேட்டறியலாம் என, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.