டயாபர் தொழிற்சாலை பணிகளை நிறுத்த உத்தரவு
பொங்கலுார்; பல்லடம், வாவிபாளை யத்தில் 'டயாபர்' தொழிற்சாலை அமைக்க தனியார் நிறுவனம் திட்டமிட்டது. இது சுற்றுச்சூழலை பாதிக்கும். தொழிற்சாலை பணியை நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து, கிராம சபாவிலும் சுற்றுச்சூழலை பாதிக்கும் தனியார் தொழிற்சாலை அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். இதனால், அதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. ஊராட்சித் தலைவர்களின் பதவி காலம் முடிந்ததும், கலெக்டர் ஊராட்சி தீர்மானத்தை ரத்து செய்தார். அதன்பின் தனி அலுவலரால் கட்டட அனுமதி வழங்கப்பட்டது. மீண்டும் கட்டட பணி துவங்கியது.கட்டட அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி நேற்று நுாற்றுக்கணக்கான விவசாயிகள் வாவிபாளையத்தில் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர்.போராட்டத்திற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. மதியம் ஒரு மணி வரை விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன் வரவில்லை.இதனால், விவசாயிகள் பல்லடம் - உடுமலை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் நேரில் வர வேண்டும். தனியார் தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும், வேலாத்தாள் நிறுவனம் வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பா.ஜ., மாநில பொது செயலாளர் முருகானந்தம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன்பின், பல்லடம் தாசில்தார் சபரிகிரி விவசாயிகளிடம் பேச்சு நடத்தினார். பணியை நிறுத்தி வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்புக்கு இரண்டு போலீசார் பணியில் இருப்பர் என்றார்.இதனால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தால் பல்லடம் - உடுமலை ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.