அங்கன்வாடி மையங்களுக்கு நிரந்தர கட்டடம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
உடுமலை : குடிமங்கலம் ஒன்றியத்தில், தற்காலிக கட்டடத்தில், இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 75க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்கள் வாயிலாக, கிராம கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு, குழந்தைகளின் ஆரம்ப கால கல்வி மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன; குழந்தைகள் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த அங்கன்வாடி மையங்கள் பெரும்பாலானவை, தற்காலிக கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றன. ஒன்றியத்தில், 40க்கும் குறைவான அங்கன்வாடி மையங்களுக்கு மட்டுமே நிரந்தர கட்டடம் உள்ளது.பிற மையங்கள், கிராமங்களில், பயன்பாடின்றி கைவிடப்பட்ட, மகளிர் சுய உதவிக்குழு பயிற்சி மைய கட்டடங்கள் மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டிலுள்ள கட்டடங்களில், செயல்பட்டு வருகின்றன.இதில், சில கட்டடங்கள் பராமரிப்பின்றி உள்ளதால், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே அங்கன்வாடி மையங்களுக்கு, நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில், நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்த மைய கட்டடங்களை, ஒன்றிய, ஊராட்சி பொது நிதி, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் கட்ட முடியும். ஆனால், அங்கன்வாடி மையத்துக்கான கட்டடம் கட்ட போதியளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை.அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் நிரந்தர கட்டடம் கட்டி, குழந்தைகளின் பாதுகாப்பை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.