உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி ஜவுளி விற்பனை களைகட்டியது! கடைவீதியில் குவிந்த மக்கள்

தீபாவளி ஜவுளி விற்பனை களைகட்டியது! கடைவீதியில் குவிந்த மக்கள்

திருப்பூர்: தீபாவளி பண்டிகைக்கான ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் 'பர்ச்சேஸ்' களைகட்டியதால், திருப்பூரின் முக்கிய சாலைகள் நேற்றே, விழாக்கோலம் பூண்டிருந்தன. போனஸ் பட்டுவாடாவை நிறுவனங்கள் துவங்கினால், விற்பனை மேலும் களைகட்டும்.திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, ஜவுளி எடுக்க திருப்பூரை தேர்வு செய்கின்றனர். பின்னலாடை நிறுவனங்கள், போனஸ் பட்டுவாடாவை இன்னும் துவங்கவில்லை; வரும், 19 மற்றும் 26ம் தேதிகளில், சம்பளத்துடன் போனஸ் வழங்க, உரிமையாளர்கள் தயாராகிவிட்டனர்.இருப்பினும், தீபாவளிக்கு புத்தாடை எடுக்க, போனஸை எதிர்பார்க்காமல், முன்கூட்டியே ஜவுளி எடுக்கும் பணியை பலரும் நேற்றே துவக்கிவிட்டனர்.பெண்கள், குழந்தைகள், ஆண்களுக்கான புத்தாடைகள் வாங்க, குடும்பத்தினருடன் நேற்று திருப்பூர் வந்திருந்தனர். பண்டிகையை முன்னிட்டு, கடை வீதிகளில் தற்காலிக கடைகளும் நேற்றே முளைத்திருந்தன.புதுமார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காமராஜர் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மாநகராட்சி ரோடு பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. காதர்பேட்டை சுற்றுப்பகுதிகளில், பின்னலாடை மற்றும் உள்ளாடை விற்பனை, காலை முதல், மதியம் 3:00 மணி வரை களைகட்டியிருந்தது.அதற்கு பிறகு, திடீரென மழை தலைகாட்டியதால், கூட்டம் அப்படியே குறைந்தது. மழைவிட்டதும், மீண்டும் மக்கள் கூட்டம் வரத்துவங்கியதால், வியாபாரிகள் ஆறுதல் அடைந்தனர்.முதல்கட்டமாக, குடும்ப உறுப்பினர்களுக்கு புத்தாடை எடுக்கும் பணியை முடிக்கவே பலரும் விரும்புகின்றனர். நடுத்தர மக்களின் கனவு, தீபாவளி போனஸ் மூலம்தான், நிறைவேறிக் கொண்டிருக்கிறது. போனஸ் பட்டுவாடா துவங்கியதும், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில், மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.பண்டிகைக்கு முன்னதாக, இன்னும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே உள்ளன. அதன்படி, 20 மற்றும் 27ம் தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில், மக்கள் கூட்டம் அலைமோதும்; அதற்கேற்ப, விற்பனை வியூகம் வகுத்து, ஜவுளிக்கடைகளும், பர்னிச்சர் கடைகளும், அதிரடியான விழாக்கால சலுகை அறிவிப்புகளுடன் வியாபாரத்தை துவக்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை