''நாய்க்கடி தடுப்பூசியை குறிப்பிட்ட தேதிகளில் தவறாமல் போட வர வேண்டும். நாய்க்கடி விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது'' என, பல்லடம் அரசு மருத்துவமனை, நாய்க்கடி சிகிச்சை பிரிவில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவை: நாய் கடித்தால் செய்ய வேண்டியவை: நாய் கடித்த உடன் ஓடும் தண்ணீரில் ஐந்து நிமிடம் கடித்த இடத்தை சுத்தமாக கழுவ வேண்டும். உடனே டி.டி. மற்றும் ஏ.ஆர்.வி. நாய்க்கடி தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனை செல்ல வேண்டும். நாய்க்கடி தடுப்பூசியை குறிப்பிட்ட தேதிகளில் தவறாமல் போட வர வேண்டும். கடித்த நாய் உங்கள் பகுதியில் இருந்தால், கண்காணிக்க வேண்டும். கடித்த நாயின் உடல் நிலை, மாற்றம் பற்றிய தகவல்கள் தெரிய வந்தால், மருத்துவமனைக்கு தெரிவிக்கவும். செய்யக்கூடாதவை: நாய்க்கடி காயத்தின் மேல் சுண்ணாம்பு, மஞ்சள் தடவ வேண்டாம். நாய் கடித்த பின் எந்த நிலையிலும் அலட்சியப்படுத்த வேண்டாம். நாயை உடனே கொல்ல வேண்டாம். சிராய்ப்பு, நக்குதல், எச்சில் படுதல் ஆகியவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் நாய்க்கடி தடுப்பூசி அட்டவணையை பின்பற்றுவதை அலட்சியம் செய்யக்கூடாது. விழிப்புணர்வு தேவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்,' நாய்க்கடித்து சிகிச்சை வருவோர் அலட்சியமாக உள்ளனர். அனைவரும் நாய்கள், நாய்க்கடி குறித்து அறிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது,' என்றனர். ---- பல்லடம் அரசு மருத்துவமனையில் நாய்க்கடி தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பு பலகை நாயிடம் தப்பிப்பது எப்படி? ''தெரியாத நாயின் அருகே ஒரு போதும் செல்ல வேண்டாம். அது சங்கிலி அல்லது கயிறுடன் உரிமையாளரிடம் இருந்தாலும், தெரியாத நாய் உங்களை நெருங்கி கொஞ்ச வரும் போது, நீங்கள் அசையாமல் நிற்க வேண்டும். அமைதியாக நின்று, கைகளை பிடித்துக் கொண்டு நாய் உங்களை விட்டு செல்லும் வரை அல்லது மற்றவர்களின் உதவி கிட்டும் வரை காத்திருக்கவும். ஒரு வேளை, நாய் உங்கள் மேல் பாய்ந்து தள்ளி விட்டால், சுருண்டு படுத்துக் கொண்டு, கைகளினால் கழுத்து மற்றும் முகத்தினை மூடிக் கொள்ள வேண்டும். நாய் எதையாவது தின்று கொண்டோ, மென்று கொண்டோ, குடித்துக் கொண்டோ இருக்கும்போது, நாய் அருகே நெருங்க வேண்டாம். நாய்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது குறுக்கிடக் கூடாது. துாங்கிக் கொண்டிருக்கும், ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும், அடிபட்ட வயதான அல்லது குட்டிகளுடன் இருக்கும் நாய் அருகில் செல்லக்கூடாது. ஒருநாய் உங்களை பயமுறுத்தினால், அமைதியாக இருக்கவும், மோசமான, அபாயகரமான நாய் மூடிய வாயுடன், மேல் நோக்கி நிமிர்ந்த காதுகளுடன் கூரிய பார்வையுடன் காணப்படும். கடிக்க தயாராகும் நாய் உறுமலுடன், பற்களை காட்டிக் கொண்டு முதுகு, வாலை உயர்த்தியவாறு காணப்படும். ஒரு நல்ல பாதுகாப்பான நாய் இளைப்பாற மூச்சு விட்டுக்கொண்டு, மகிழ்ச்சியான முகபாவனையுடன் வாலை ஆட்டிக்கொண்டிருக்கும்'' என்று பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.