வாகனங்களை ஓட்டும் போது மொபைல்போனில் பேசக்கூடாது! சாலைப்பாதுகாப்பு விழாவில் அறிவுரை
உடுமலை; வாகனங்கள் ஓட்டும் போது, மொபைல்போனில் பேசக்கூடாது, என, சாலைப்பாதுகாப்பு விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உடுமலையில், வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலைப்பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.குட்டைத்திடலில், மாவட்ட நீதிபதி ராமலிங்கம், சார்பு நீதிபதி மணிகண்டன், நீதித்துறை நீதிமன்ற நீதிபதி நித்யகலா, டி.எஸ்.பி., வெற்றி வேந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.பேரணி, தளி ரோடு, பொள்ளாச்சி ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தளி ரோடு ரயில்வே மேம்பாலம், மூணாறு ரோடு வழியாக சென்று, உடுமலை வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியின் போது, இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், வாகனங்கள் ஓட்டும் போது மொபைல்போனில் பேசக்கூடாது, மது போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது.வாகனங்களின் ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும், அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும், என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, தளி ரோடு வழியாக பொள்ளாச்சி ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தளி ரோடு ரயில்வே மேம்பாலம், மூணாறு ரோடு வழியாக சென்று, உடுமலை வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது.தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உடுமலை தீயணைப்பு துறை சார்பில், தீ பிடித்தால் எவ்வாறு தடுப்பது, வாகன ஓட்டுனர்கள், பொது மக்கள் எதிர்கொள்வது எப்படி என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.