மேலும் செய்திகள்
'ஆரோக்கியமான தலைமுறைக்கு தாய்ப்பால் அவசியம்'
03-Aug-2025
பல்லடம்; பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா, செம்மிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி பேசியதாவது: 'டிவி' சீரியல்களை பார்த்து தாய்மார்கள் சீரியஸ் ஆகிவிடுகின்றனர். இவற்றையெல்லாம் பார்த்தால், உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளும் அப்படித்தான் வளரும். கர்ப்ப காலத்திலாவது மொபைல் போன், டிவி ஆகியவற்றை தவிர்த்து, புராண கதைகள் படிப்பது, கோவிலுக்கு செல்வது என, நல்ல விஷயங்களில் ஈடுபடுங்கள். வளைகாப்பு என்பது கூட, வளையல்களால் எழும் ஒலி குழந்தைகளுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே நடத்தப்படுகிறது. பர்கர், பீசா என்று ஆர்டர் செய்து சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு, சரிவிகித உணவு சென்று சேராமல், இன்று, 50 சதவீத பெண்களுக்கு பிரசவ காலத்தில் தொந்தரவு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். திருப்பூர் பாரதி ரோட்டரி சேவை திட்ட தலைவர் சாரதி சிறப்புரை ஆற்றினார். அங்கன்வாடி ஊழியர்கள், ஊட்டச்சத்து உணவு குறித்து விளக்கியதுடன், சத்தான உணவுகளை காட்சிப்படுத்தினர். தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். -- செம்மிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நடந்த தாய்ப்பால் வார விழாவில், தாய்ப்பால் வழங்குவது தொடர்பான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. விழாவையொட்டி, அங்கன்வாடி ஊழியர்கள் தானியங்களால் உருவாக்கிய விநாயகர். குழந்தைகளைக் காக்கும் தாய்ப்பால் அமர்ந்த நிலையில்தான் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். துாங்கிய நிலையில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது குழந்தையின் உயிருக்கே ஆபத்து உள்ளது. அழகு போய்விடும் என்பதற்காக தாய்மார்கள் பால் கொடுப்பதை நிறுத்துவது, குழந்தையின் வளர்ச்சியை பாதிப்பதுடன், தாய்மார்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால், நோய்களில் இருந்து குழந்தையை காப்பாற்றுகிறது. - சுடர்விழி, வட்டார மருத்துவ அலுவலர்
03-Aug-2025