உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 100 வயது கடந்த 999 வாக்காளர்கள்; வீடு வீடாக சரிபார்ப்பு துவக்கம்

100 வயது கடந்த 999 வாக்காளர்கள்; வீடு வீடாக சரிபார்ப்பு துவக்கம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், நுாறு வயதை கடந்த 999 பேர் வாழ்கின்றனர். வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 27 ஆயிரத்து 50 வாக்காளர் உள்ளனர். இவர்களில், 999 வாக்காளர்கள், நுாறு வயதை கடந்தவர்களாக பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதிகபட்சமாக காங்கயத்தில், 274 பேர்; பல்லடத்தில், 171 பேர், நுாறு வயதை கடந்துள்ளனர். தாராபுரத்தில், 163; திருப்பூர் வடக்கு தொகுதியில், 124; மடத்துக்குளத்தில், 99; உடுமலையில், 87 பேர்; அவிநாசியில், 80; திருப்பூர் தெற்கு தொகுதியில் ஒருவர் என, நுாறு வயதை கடந்த 999 பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், 70 முதல் 79 வயது வரை, 1 லட்சத்து 76 ஆயிரத்து 588 வாக்காளர்; 80 வயதுக்கு மேற்பட்டோர் 82 ஆயிரத்து 795 பேர்; நுாறு வயதை கடந்தவர்களாக 999 பேர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியலில் நுாறு வயதை கடந்ததாக இடம்பெற்றுள்ள வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,), வாக்காளர் பட்டியல்படி நுாறு வயதை கடந்த வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வாக்காளர் உண்மையாகவே, நுாறு வயதை கடந்துள்ளாரா; பிறந்த தேதி பதிவு செய்ததில் தவறு நடந்துள்ளதா என, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இறந்த வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாதது; பிறந்த தேதி தவறாக பதிவு செய்தது ஆகியவையே, நுாறு வயதை கடந்தும் வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் இடம்பெற முக்கியமான காரணமாக உள்ளது. வாக்காளர் இறந்திருப் பின், பெயர் நீக்கத்துக்கான படிவம் 7; பிறந்த தேதி பதிவில் தவறு ஏற்பட்டிருப்பின், வயதை திருத்தம் செய்வதற்காக, திருத்தத்துக்கான படிவம் 8 வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டுவருகிறது. கள ஆய்வு அடிப்படையில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின்போது, பெயர் நீக்கம், திருத்தங்கள்செய்யப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர். நுாறு வயதைக் கடந்த வாக்காளர் எண்ணிக்கை தொகுதி - வாக்காளர்கள் காங்கயம் - 274 பல்லடம் - 171 தாராபுரம் - 163 திருப்பூர் வடக்கு - 124 மடத்துக்குளம் - 99 உடுமலை -87 அவிநாசி - 80 திருப்பூர் தெற்கு - 1திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்கள்70-79 வயதினர் - 1,76,58880 வயது மற்றும் அதற்கு மேல் - 82,795100 வயது கடந்தவர்கள் - 999


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ