தங்கம்மாள் ஓடையை துார்வாருங்க; நகராட்சிக்கு வலியுறுத்தல்
உடுமலை; உடுமலை தங்கம்மாள் ஓடை புதர் மண்டி காணப்படுவதோடு, பாதாளச்சாக்கடை கழிவு நேரடியாக கலந்து வருகிறது.உடுமலை பகுதியிலுள்ள, ஏழு குளங்கள் மற்றும் நகர பகுதி மற்றும் மேற்கு கிராமங்களில் பெய்யும் மழை வெள்ள நீர், உப்பாறு ஓடைக்கு செல்லும் நீர் வழித்தடமாக தங்கம்மாள் ஓடை உள்ளது.நகரின் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஓடும் தங்கம்மாள் ஓடை நீர் வழித்தடத்தில், முட்செடிகள், கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. சிறிய மழை பெய்தாலும், வெள்ள நீர் வடிய வழியின்றி, வீடுகளுக்கும் புகும் அபாயம் உள்ளது. மேலும், புதர்களுக்கு மத்தியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளதால், மழை நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மேலும், நகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் பாதாளச்சாக்கடை திட்டத்தின் பிரதான குழாய், தங்கம்மாள் ஓடை வழியாக செல்கிறது.நகர பகுதியில் சேகரிக்கப்படும், பாதாளச்சாக்கடை நீர், ஏரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரித்து, அதற்கு பின் ஓடையில் வெளியேற்றப்படுகிறது.பிரதான குழாய் மற்றும் மேனுவல் ஓடை நீர் வழித்தடத்தில் அமைந்துள்ள நிலையில், முறையாக பராமரிக்காதது மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, மேனுவல் மற்றும் குழாய்களிலிருந்து, நேரடியாக பாதாள சாக்கடை கழிவு நீர், ஓடையில் கலந்து, துர்நாற்றம் மற்றும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.தற்போது வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தங்கம்மாள் ஓடையை முழுமையாக துார்வார வேண்டும். மேலும், பாதாள சாக்கடை கழிவு நீர் கலக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.