உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கறிக்கோழிகள் தாகம் தணிக்க பண்ணையில் சொட்டு நீர் முறை

கறிக்கோழிகள் தாகம் தணிக்க பண்ணையில் சொட்டு நீர் முறை

பல்லடம்; குடிநீர் வீணாவதை தவிர்க்கும் வகையில், பல்லடம் பகுதி கறிக்கோழி பண்ணைகளில், கோழிகளுக்கு சொட்டு நீர் முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. வாரந்தோறும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன. இவை, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. கறிக்கோழிகளுக்கு தீவனங்கள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தண்ணீரும் அத்தியாவசியம். பண்ணைகளில், கோழிகளுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக குவளைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், கோழிகள் குடிப்பதற்கும், அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறியதாவது:''கோழிகள், குடிக்கும் நீர் மற்றும் வெளியேற்றும் கழிவுகள் மூலம் வெப்பத்தை தணித்துக் கொள்கின்றன. வெப்பத்தை தணிக்க 'ஸ்பிரிங்ளர்' முறையில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கோழிகள் எடுத்துக் கொள்ளும் தீவனங்களைப் பொறுத்தே அவற்றின் குடிநீர் தேவை உள்ளது. சாதாரணமாக, கோழி ஒன்று, 150 கிராம் தீவனம் எடுத்துக் கொண்டால், 300 மி.லி., தண்ணீர் குடிக்கும். கோடைக்காலத்தில், இதன் அளவு, 450 மி.லி., ஆக அதிகரிக்கும். ''கோடைக்காலத்தில், கோழிகள் குறைவாகத்தான் தீவனங்களை எடுத்துக் கொள்ளும். இதற்கு ஏற்ப 'நிப்பிள்' முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இம்முறையில், குழாயில் தயாராக நிற்கும் சொட்டு நீரை, கோழிகள் கொத்தும் போது, அதிலிருந்து ஓரிரு சொட்டுகள் தண்ணீர் கிடைக்கும். கோடைக்காலத்தில் இந்த முறையிலான குடிநீர் முறை, கோழிகளுக்கு போதாது என்றாலும், குடிநீர் வீணாகாமல் இருக்க உதவுகிறது. ஐந்தாயிரம் கோழிகள் இருக்கும் ஒரு பண்ணையில், கோழிகள் குடிப்பதற்கு மட்டுமே, 2 முதல் 3 ஆயிரம் லிட்டர் குடிநீர் வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ