தளி ரோட்டில் தொடரும் விதிமீறல் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
உடுமலை : தளி ரோட்டில், விதிமீறல்களால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி, வாகன ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பிரியும் தளி ரோடு, நகர போக்குவரத்தில், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.அரசு அலுவலகங்கள், திருமூர்த்திமலை, அமராவதி அணை, மறையூர், மூணாறு உட்பட இடங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் இந்த ரோடு வழியாகவே நகரை கடந்து செல்ல வேண்டும். இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், வாகன ஓட்டுநர்கள் தளி ரோட்டை கடக்கவே திணறுகின்றனர்.இதற்கு, ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் முக்கிய காரணமாக இருந்தது. இதையடுத்து, அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, குட்டைத்திடலில், வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டது.அதன்படி, ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டது. அதிக இடவசதி உள்ள குட்டைத்திடலில், வாகனங்களை நிறுத்தி விட்டு, அருகிலுள்ள கடைகளுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. சிறிது காலம் இந்த நடைமுறையை பின்பற்றினர்.தற்போது மீண்டும் ரோட்டோரத்தில், வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால், வாகனங்கள் விலகிச்செல்ல இடமில்லாமல், பல கி.மீ., தொலைவுக்கு அணிவகுத்து நிற்கின்றன.காலை, மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வாக, தளி ரோட்டில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார் அபாரதம் விதிக்க வேண்டும். விதிமீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நெரிசலை தவிர்க்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.