உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உப்புக்கழிவு அகற்ற ரூ.65 கோடி தேவை; சாய ஆலைகள் வேண்டுகோள்

உப்புக்கழிவு அகற்ற ரூ.65 கோடி தேவை; சாய ஆலைகள் வேண்டுகோள்

திருப்பூர்; திருப்பூரில் தேங்கியுள்ள ஒரு லட்சம் டன் கலவை உப்பு கழிவுகளை அகற்றுவதற்கு, மாநில அரசு உரிய வழிகாட்டுதல் வழங்கினால், 12 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முறையான அனுமதி பெற்ற பின், இவற்றை அகற்றுவதற்கு 65 கோடி ரூபாய், சாய ஆலைகளுக்கு அவசியமாக உள்ளது.பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகள், சாயக்கழிவுநீரை 'ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கின்றன. இதில், 350 சாய ஆலைகள் 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் மூலமாகவும், 62 ஆலைகள் தனிநபர் சுத்திகரிப்பு மையங்கள் மூலமாகவும் கழிவுநீரை சுத்திகரித்து வருகின்றன.சுத்திகரிப்பின் கடைசி நிலையில், சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் மற்றும் சிறிதளவு இதர உப்புக்களுடன் கூடிய கலவை உப்பு கழிவாக கிடைக்கிறது. இதை அகற்றுவதற்கான சரியான வழிகாட்டுதல்களை அரசு வழங்காததையடுத்து, அந்தந்த சுத்திகரிப்பு மையங்களிலேயே உப்பு கழிவுகள் கொட்டிவைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013 முதல் இதுவரை, மொத்தம் ஒரு லட்சம் டன் கலவை உப்பு கழிவுகள் தேங்கியுள்ளன.மழையில் கரையாமலிருக்க, கட்டடம் கட்டி இவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். இதனால் சுத்திகரிப்பு மையங்களை இயக்கிவரும் சாய ஆலை துறையினர், புதிய தொழில்நுட்பங்களை நிறுவுவதற்கு இட நெருக்கடி ஏற்படுகிறது; கழிவை பாதுகாப்பதற்காக தனியே செலவு செய்ய வேண்டியுள்ளது.

தினமும் 12 கோடி லிட்டர்

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பொருளாளர் மாதேஸ்வரன் கூறியதாவது:திருப்பூரில், நாளொன்றுக்கு 12 கோடி லிட்டர் சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கின்றன. பிரித்தெடுக்கப்படும் 93 சதவீத தண்ணீர் மற்றும் 4 சதவீதம் பிரைன் சொல்யூசன்(Brine solution) எனப்படும் அடர் உப்பு நீர் ஆகியவை, மறுசுழற்சி முறையில் மீண்டும் சாயமேற்ற பயன்படுத்தப்படுகிறது. மீதம் மூன்று சதவீதத்தில், ஒன்றரை சதவீத உப்பு பிரித்தெடுக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய ஒன்றரை சதவீத கலவை உப்புதான், மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாமலும், மேற்கொண்டு சுத்திகரிக்க முடியாமலும் சுத்திகரிப்பு மையங்களில் தேங்கிவருகிறது.

தனியார் நிறுவனத்துக்குஅனுமதி

சென்னை ஐ.ஐ.டி., - மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம்(சி.எல்.ஆர்.ஐ.,) ஆகியவற்றின் கலவை உப்பை அகற்றும் தொழில்நுட்பங்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ராமநாதபுரத்திலுள்ள ஒரு உப்பு பிரித்தெடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு அனுப்புவதற்கு மத்திய, மாநில மாசுகட்டுப்பாடு வாரியங்கள் தற்போது அனுமதி அளித்துள்ளன. இது ஒரு நல்ல வழி.ஆனால், ஒரு டன் உப்பு கழிவை அனுப்புவதற்கு சாய ஆலைகள், 6500 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. ஒரு லட்சம் டன் உப்பு கழிவை அகற்றுவதற்கு, 65 கோடி ரூபாய் செலவாகும். அந்நிறுவனத்தின் கொள்ளளவும் மிக குறைவாகவே உள்ளது.

அரசு மானியம் தேவை

மாநில அரசு, உப்பு பிரித்தெடுக்கும் வெவ்வேறு நிறுவனங்களை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கும் திருப்பூரிலிருந்து கலவை உப்பு அனுப்புவதற்கு அனுமதி வழங்கவேண்டும். சாய ஆலைகளின் உப்பு அனுப்புவதற்கான செலவினத்துக்கு, அரசு மானியமும் வழங்கவேண்டும்.மத்திய, மாநில அரசுகள், கலவை உப்பு கழிவை கையாள்வது குறித்த நிலையான வழிமுறைகளை(எஸ்.ஓ.பி.,) வழங்கி, தேவையான நிதி உதவிகள் செய்துகொடுக்கவேண்டும். பூஜ்ஜிய திரவ கழிவு நிலையை எட்டியுள்ள திருப்பூர் சாய ஆலைகளுக்கு, அரசு கைகொடுத்தால், பூஜ்ஜிய திடக்கழிவு நிலையையும் எட்டிய பெருமையும் கிடைக்கும். இவ்வாறு, மாதேஸ்வரன் கூறினார்.

'திரவ நிலையில் அனுப்பவும் திட்டம்'

''சாய ஆலைகளில் கழிவாக வெளியேறும் அதே சோடியம் குளோரைடு உப்புதான், காஸ்டிக் சோடா தயாரிப்புக்கு பிரதான மூலப்பொருளாக உள்ளது. ராயபுரம் பொதுசுத்திகரிப்பு மையம், துாத்துக்குடி காஸ்டிக் சோடா தயாரிப்பு நிறுவனத்துக்கு, கலவை உப்பை திரவ நிலையில் அனுப்புவதற்கு, மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளது. திரவ நிலை உப்பு கழிவை லாரிகளில் கொண்டுசெல்வது சாத்தியமா; அதற்கான செலவினங்கள் கட்டுப்படியாகுமா; சோதனை ஓட்டம் நடத்தி வெற்றி கிடைக்கவேண்டும், அரசு அனுமதி கிடைக்குமா என்பதையெல்லாம் ஆராயவேண்டியுள்ளது'' என்றார், சாய ஆலைகள் உரிமையாளர் சங்கப்பொருளாளர் மாதேஸ்வரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !