விஜயதசமியையொட்டி திருப்பூர், ஹார்வி திருமண மண்டபத்தில், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் சார்பில், அரங்கேறியது, அருணாச்சல கவிராயர் இயற்றிய 'ராம நாடகம்'. மொத்தம், 123 கலைஞர்கள், இரண்டரை மணி நேரம் 'நான் ஸ்டாப்' ஆக நடந்த நாட்டிய நாடகத்தில், அந்தந்த கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கி அதற்கேற்றவாறு, மாணவியர் நடனமாடியது அற்புதம். கருணையே வடிவான ராமபிரானின் சாந்த சொரூபத்தை கண்ணில் நிறுத்திய மாணவி, பத்து தலையுடன் நடித்து, அதுவும் நடனமும் ஆடிய மாணவி, சீதா, அனுமன், வாலி, சுக்ரீவன், ஜடாயு என முக்கிய கதாபாத்திரங்களில் ஜொலித்த மாணவியருக்கு அவ்வப்போது எழுந்த கரகோஷம் அவர்களின் ஈடுபாட்டுக்கு சாட்சியாக விளங்கியது.
சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட இயக்குநர் டாக்டர் சந்தியா சங்கர் நம்மிடம் பகிர்ந்தவை: கடந்த பிப், மாதம் துவங்கி அரங்கேறும் நாள் வரை எட்டு மாதங்கள் ரிகர்சல் பார்த்தோம். மேடையில் எந்த இடத்தில், யார் எங்கு நிற்க வேண்டும், எவ்வாறு ரியாக் ஷன் காட்ட வேண்டும், அதேநேரம் பாடலுக்கு தப்பாமல் எவ்வாறு அபிநயம் பிடித்து நடனமாட வேண்டும் என்பதை பார்த்துபார்த்து குழந்தைகளுக்கு புரிய வைத்தோம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ராவணனாக நடித்த மாணவி கோபிகா, ரிகர்சலின் போது, தலையின் நீளமான குச்சியை கட்டி கொண்டு நடித்தார். அரங்கேற்ற நாளில், பத்து தலைகளுடன் அவர் மேடையில் தோன்றிய போது, பார்வையாளர்களின் கை தட்டல் கேட்டதும் தான் எனக்கு நிம்மதியாக இருந்தது.
123 பேரில், ஒரேயொருவர் தான் ஆண். விஜயதசமி அன்று காலை, 9:00 மணிக்கு ஆரம்பித்த 'மேக்கப்' மாலை, 5:30 மணிக்கு தான் முடிந்தது. யார் யாருக்கு என்ன உடை அணிய வேண்டும், அதிலுள்ள வேலைப்பாடுகள் என பார்த்து பார்த்து செய்தோம். பால காண்டம் துவங்கி, ராமர் - சீதா திருமணம், வனவாசம், பட்டாபிேஷகம் வரையிலான ஆறு காண்டங்களையும் கலைஞர்களின் நடை, உடை, பாவனை மற்றும் நடன அசைவுகள், நம் கண் முன் கொண்டுவந்தன. பெற்றோரின் ஒத்துழைப்பும் இருந்ததால், நாடகம் நன்றாக அமைந்தது. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்தி முடிக்கும் வரை மழை வராமல் பார்த்து கொண்டு எங்கள் மேல் கருணை மழை பொழிந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு தான் எல்லாப் புகழும்.