மேலும் செய்திகள்
வனத்துறையினருக்கு கண்ணாமூச்சி காட்டும் யானைகள்
02-Jan-2025
உடுமலை : உடுமலை அருகே, ஆண்டியூர் பகுதியில், யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில், எல்லை பிரச்னையில் வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், தோட்டத்துசாளைகளை காலி செய்து வருகின்றனர்.உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலையடிவாரத்தில், ஆண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மலையடிவார கிராமங்களாக உள்ளதால், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் கூடிய யானைக்கூட்டங்கள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி, அருகிலுள்ள தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து, தென்னை மரங்களை சாய்த்து வருகிறது.இரு ஆண்டு வரை வளர்ந்த, இளந்தென்னைகள் பெருமளவு சேதப்படுத்தி வருகிறது. ஆண்டியூர் பகுதி, உடுமலை மற்றும் பொள்ளாச்சி வனச்சரகங்களில், கோவை- திருப்பூர் மாவட்ட எல்லையாக உள்ளதால், வனத்துறையினர் எங்கள் பகுதி இல்லை என, யானைகளை விரட்ட வருவதில்லை.இதனால், மனித உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டத்துச்சாளைகளில் தங்காமல், கிராமத்திற்கு திரும்பி வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: வன எல்லையிலிருந்து யானைக்கூட்டங்கள், மலையடிவாரத்திலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், பாசன கட்டமைப்புகளை சேதப்படுத்தி வருகின்றன.வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தால், உடுமலை, பொள்ளாச்சி வனத்துறையினர் தங்கள் எல்லை இல்லை என ஒதுங்கிக்கொள்கின்றனர். இதனால், இரவு நேரங்களில், தோட்டத்துசாளைகளில் தங்காமல், அனைவரும் கிராமங்களுக்கு வந்து விடுகிறோம்.பகல் நேரத்தில் மட்டும், தோட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வனத்துறையினர் ஒருங்கிணைந்து, வனத்தை விட்டு, வெளியேறி, மலையடிவார கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டங்களை விரட்ட வேண்டும்.வன எல்லையிலிருந்து, யானை உள்ளிட்ட விலங்குகள் வெளியேறுவதை தடுக்க, அகழி மற்றும் சோலார் மின் வேலி உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
02-Jan-2025