எமர்ஜென்ஸி இந்தியாவின் இருண்ட காலம் ; கருத்தரங்கில், பா.ஜ., நிர்வாகி காட்டம்
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாவட்ட வடக்கு பா.ஜ சார்பில், எமர்ஜென்சி 50வது ஆண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.இதில், பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில பொது செயலாளர் வீர திருநாவுக்கரசு, கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பேசியதாவது:கடந்த, 1971ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், ரேபரேலி தொகுதியில் இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. எனவே தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா தனக்கு வந்த நெருக்கடியை தேசத்துக்கு வந்த நெருக்கடியாக பொய் சொல்லி 1975 ஜூன் 25ல், நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.அடுத்து 21 மாதங்கள் இந்தியாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது. அரசியல் இயக்க சட்டம் முற்றிலும் சிதைக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். நீதி துறையில் தலையீடு இருந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு இருண்டகாலம் என்றால் இந்திரா தலைமையிலான காங்., அரசாங்கம் கொண்டு வந்த எமர்ஜென்சி காலகட்டம்தான்.ஏன் இந்த வரலாற்றை நினைவு கூற வேண்டிய அவசியம் என்றால் இன்று காங்., கட்சியினர் அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டத்தை கையில் பிடித்து கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் பாதுகாவலர் போல் பேசுகின்றனர். இதே காங்கிரஸ் தான், அம்பேத்கர் எண்ணங்களுக்கும் நோக்கங்களுக்கும் எதிராக அவர் இயற்றி கொடுத்த அரசியல் அமைப்பு சட்டத்தை படுகொலை செய்தது.அந்த காங்., கட்சியால் தி.மு.க., அரசு கலைக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் போலீஸ் சித்ரவதைக்கு ஆளானார். அவரை பாதுகாக்க முயன்ற சிட்டிபாபு இறந்து போனார். ஆனால் இன்று காங்., - தி.மு.க., ஒன்றாக உள்ளது. எமர்ஜென்சி என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானதாகும். மீண்டும் இந்த மோசமான நடைமுறை இந்தியாவில் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பா.ஜ., பிரசாரம் செய்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட பார்வையாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் பாயின்ட் மணி, செந்தில்வேல், சின்னசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.