அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்; வழியோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
உடுமலை; நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பாதுகாப்பு கருதி அமராவதி அணையில் இருந்து, நேற்று மதியம் முதல், வினாடிக்கு, 2 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கேரளா மூணாறு, மறையூர் சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ளது. அப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அணையின் மொத்த கொள்ளளவான, 90 அடியை நீர்மட்டம் எட்டும் சூழல் இரு நாட்களுக்கு முன் ஏற்பட்டது.இதையடுத்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று முன்தினம் நீர்வரத்து இயல்பாக இருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது; நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கனமழை பெய்யத்துவங்கியது.நேற்று மதியம், அணையின் நீர்மட்டம், 90 அடிக்கு, 87.70 அடியாக இருந்தது; மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,839 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,031 கனஅடி நீர்வரத்து இருந்தது.இதனால், பாதுகாப்பு கருதி அணையிலிருந்து பிரதான கால்வாய் மற்றும் கீழ் மதகு வழியாக அமராவதி ஆற்றில், வினாடிக்கு, 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தால், கூடுதலாக உபரி நீர் வெளியேற்றப்படும் என்பதால், வழியோர கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.