அரசு பள்ளி மேற்கூரைகளை தரமாக மாற்ற எதிர்பார்ப்பு
உடுமலை; ஓட்டுக்கட்டடங்களாக இருக்கும் அரசு பள்ளிகளின் மேற்கூரைகளை, சிமென்ட் தளமாக மாற்றுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில், பெரும்பான்மையான பழமையான அரசு பள்ளிகளில் ஓட்டுக்கட்டடங்கள்தான் வகுப்பறைகளாக உள்ளன. புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள்தான் சிமென்ட் மேல்தளமாக உள்ளது.அரசுப்பள்ளிகளின் பழமையான கட்டடங்கள் தரமாகவும், உறுதியாகவும் உள்ளது. ஆனால் ஓடுகளால் ஆன மேற்கூரைகள் அடிக்கடி சிதிலமடைந்தும், உடைந்தும் விடுவதால் பள்ளிகளில் பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது.ஓட்டுக்கட்டடங்களில், மழை நாட்களில் மழைநீர் உள்ளே புகுந்துவிடுகிறது. இதனால் வகுப்புகள் நடத்த முடியாமல் வீணாகிறது. மேற்கூரைகளின் ஓடுகளை மாற்றினாலும், பள்ளியில் இருக்கும் மரங்களிலிருந்து கிளைகள் விழுவது, காய்கள் ஓடுகளில் விழுவதால்அவை உடைந்து மீண்டும் சேதமாகின்றன.உடுமலை சுற்றுப்பகுதியில், இவ்வாறு ஓட்டு கட்டடங்களில் பெரும்பான்மையான மேற்கூரைகள் சேதமடைந்த நிலையில் தான் உள்ளன.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:ஓட்டுக்கட்டடங்களில் அறைகளின் சுவர்கள் உறுதியாக இருந்தாலும், மேற்கூரை மோசமாகதான் உள்ளது. இதனால் மழை நாட்களில் அந்த அறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால், அனைத்து மாணவர்களையும் வேறு வகுப்புக்கு மாற்றும்போது, அந்த மாணவர்களுக்கும் பாடம் நடத்த முடியாமல் போகிறது.ஓட்டு கூரைகளை அப்புறப்படுத்தி, சிமென்ட் மேல்தளம் அமைத்து தருவதால், மழைகாலத்தில் நிம்மதியாக வகுப்புகள் நடத்த முடியும்.பெற்றோரும் தொடர்ந்து இப்பிரச்னை குறித்து புகார் அளிக்கின்றனர். அரசுதான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.