உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய ஆர்டர் செயல்படுத்த சலுகை கடன் திட்டங்கள் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு

புதிய ஆர்டர் செயல்படுத்த சலுகை கடன் திட்டங்கள் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர் : ''திருப்பூருக்கு புதிய ஆர்டர் வரத்து இருந்தும், அவற்றை ஏற்று செயல்படுத்தும் அளவுக்கு நிதி ஆதாரம் இல்லை. மத்திய அரசு, புதிய சலுகை கடன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) கோரிக்கை விடுத்துள்ளது.இதன் தலைவர் முத்துரத்தினம், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம்:மத்திய அரசு தற்போதைய சூழலில் தகுந்த நிதி ஆதார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி மற்றும் ஆடைத் தொழில், ஏற்கனவே எரிபொருள், மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது, இதன் எதிரொலியாக, ஆடைகளின் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்தியாவுக்கு சாதக சூழல்

சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் வழங்கும் விலையுடன், உலக சந்தையில் போட்டியிட முடிவதில்லை. அமெரிக்காவின் அதிரடி வரி உயர்வால், நமது போட்டி நாடுகளுக்கான வர்த்தக செலவு அதிகரித்துள்ளது; இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.நம் நாடு, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுடன், ஏற்கனவே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன், 27 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் நமது ஆடை ஏற்றுமதிக்கான தேவையை கணிசமாக அதிகரிக்கும்,

செயல் மூலதனம்பற்றாக்குறை

ஏற்றுமதியாளருக்கு, புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும், செயல் மூலதனப் பற்றாக்குறையால், எளிதாக உற்பத்தி செலவுகளை சமாளிக்க முடிவதில்லை.'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு, 45 நாட்களுக்குள் பில் தொகை செலுத்தப்பட வேண்டும் என்ற கடும் விதிமுறை வரவேற்கத்தக்கது. இருப்பினும், வர்த்தக சுழற்சிக்கால காலவரம்பு இரண்டு மாதங்கள் என்பதால், வாங்குபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை அடைவது கடினம். உறுதி செய்யப்பட்டுள்ள ஆர்டர்கள், கடன் உத்தரவாதக் கடிதம் போன்றவற்றின் வாயிலாக, செயல்பாட்டு மூலதனத்துக்கு தேவையான, சலுகை கடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு, பிணையமில்லா கடன் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ