கடலில் கலந்து வீணாகும் தண்ணீர் விவசாய சங்கம் கடும் கண்டனம்
பல்லடம் : பாசனத்துக்கு பயன்பட வேண்டிய தண்ணீரை அரபிக்கடலில் கலந்து வீணடிப்பதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஈஸ் வரன் கூறியதாவது: திருப்பூர், கோவை மாவட்டங்களில், பி.ஏ.பி., பாசன திட்டத்தை பயன் படுத்தி, பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. நீர் திருட்டு, வீணடிப்பு, கடைமடைக்குச் செல்லாதது, நீக்கப்படாத ஆயக்கட்டுகள் என, பல்வேறு காரணங்களால், பாசனத்துக்கு பயன்பட வேண்டிய தண்ணீர் விவசாயிகளுக்கு முறையாக கிடைப்பதில்லை. இதனால், எண்ணற்ற விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே, பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 70 அடிக்கு மேல் சென்றதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், யாருக்கும் பயன்படாமல் அரபிக் கடலில் கலந்து வீணாகி வருகிறது. சமீப நாட்களாக, பாசன நீர் கேட்டு பல்வேறு பகுதி விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்துக்கு விட்டிருந்தால், எத்தனையோ விவசாயிகள் பயனடைந்து இருப்பார்கள். இந்த ஆண்டு மட்டும், இரண்டு முறை, இதேபோல் தண்ணீர் கடலில் கலந்து வீணாகி உள்ளது. இருக்கின்ற தண்ணீரைக்கூட விவசாயிகளுக்கு வழங்க மறுப்பது, கண்டனத்துக்கு உரியது. கடலில் கலக்கும் தண்ணீரை பி.ஏ.பி.,க்கு விட்டிருந்தால், குளம் - குட்டைகள் நிரம்பி, நிலத்தடிநீரும் செறிவூட்டப்பட்டு இருக்கும். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த போக்கை கண்டிக்கிறோம். அதிகாரிகள் எதனைப் பற்றியும் சிந்திக்காமல், திட்டத்தை வீணடித்து வருகின்றனர். கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை பாசனத்துக்கு திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.