இரு தாலுகாவிலும் சர்வே துறை மிக மோசம் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், சர்வே துறையில், எந்த பணிகளும் நடப்பதில்லை; லஞ்சம் மட்டுமே பிரதானமாக உள்ளது, என விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கோட்டாட்சியர் குமார் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பலதண்டபாணி பேசியதாவது: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு, துறை வாரியாக நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.அமராவதி சர்க்கரை ஆலை, பழமையான பொதுத்துறை நிறுவனமாகும். திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு மற்றும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் ஆதாரமாக உள்ள நிலையில், இரு ஆண்டுகளாக இயக்காமல் முடங்கியுள்ளது.விவசாயிகளிடம் அரவைக்கு கரும்பு பதிவு செய்யவில்லை. எனவே, ஆலையை புனரமைக்க உடனடியாக அரசு நிதி ஒதுக்கி, இயக்கவும், அரவைக்கு கரும்பு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின் வாரியம், விவசாய மின் இணைப்புக்கு நுாற்றுக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். மின்கம்பம், மோட்டார், மின் உபகரணங்கள் வாங்கி தயார் நிலையில் இருக்கின்றனர்.ஒரு ஆண்டாக மின் இணைப்பு வழங்கவில்லை. உடனடி மின் இணைப்பு வழங்கும் தட்கல் முறையும், முடங்கியுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் சர்வே துறை மிகவும் மோசமாக உள்ளது. பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன. நில அளவை, பட்டா மாறுதல், உட்பிரிவு என அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் எதிர்பார்க்கின்றனர்.பணம் கட்டினாலும், களத்திற்கு வராமல், பிரச்னை உள்ளது, என மனுவை தள்ளுபடி செய்கின்றனர். அதிலும், மடத்துக்குளம் தாலுகாவில், மிக மோசம்.காட்டுப்பன்றிகளால், நெல்,கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. வனத்திலிருந்து, 60 கி.மீ., துாரம் வரை பரவி, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை, வன விலங்குகள் பட்டியலிருந்து நீக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளுக்கு இ - அடங்கல், என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது, வேளாண் பயிலும் மாணவர்களை கொண்டு எடுக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் பாதிப்பதோடு, குளறுபடி ஏற்படுகிறது.எனவே, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை கொண்டு எடுக்க வேண்டும்.குரல்குட்டையில், நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து, பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது, பூசாரிநாயக்கன் குளம், அமராவதி ஆறு வரை செல்லும் ஒடையில் நுாற்றுக்கணக்கான பன்றிகள் வளர்ப்பதால், சுகாதார கேடு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.வேளாண்துறையிலிருந்து, தென்னை, தோட்டக்கலைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தென்னைக்கான இடு பொருட்களுக்கு, வட்டார வேளாண் மையங்களுக்கு வர வேண்டியுள்ளது.கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கிடங்குகள், உதவி அலுவலர்கள் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கான இடு பொருட்கள், மானிய திட்டங்கள் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, பேசினார்.கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசியதாவது:அமராவதி சர்க்கரை ஆலையை புதுப்பிக்க, ரூ.80.63 கோடி தேவை. அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள், அயற்பணியாக மற்ற ஆலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது, கரும்பு பதிவு செய்து, வேறு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீர் நிலை ஆக்கிரமிப்பு விரைவில் அகற்றப்படும்.விவசாய மின் இணைப்பில், 2022 ஜன., 12 வரை உள்ள விண்ணப்பங்களுக்கு, மின் இணைப்பு வழங்கவும், தட்கல் முறையில், 2024 மார்ச் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க தயார் நிலையில் உள்ளோம். அரசு உத்தரவு வந்ததும் வழங்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.