உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வன விலங்குகளிடமிருந்து விடுதலை வேண்டும்! குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

வன விலங்குகளிடமிருந்து விடுதலை வேண்டும்! குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை,; வன எல்லையிலிருந்து, 60 கி.மீ., துாரத்திலுள்ள விவசாய பயிர்களையும், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, மயில் என வன விலங்குகள் அனைத்து பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. பல நுாறு விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், வன விலங்குகளிடமிருந்து விடுதலை வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடந்தது. அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.இதில் விவசாயிகள் பேசியதாவது: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு, ரூ.2 லட்சம் பயிர்கடன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதே போல், பிணைக்கடன், ரூ.5 லட்சம் வரை வழங்க வேண்டும்.பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு, வரும் 29ல் நீர் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே நீர் திருட்டு அதிகரித்துள்ள நிலையில், கோடை காலத்தில் நடக்கும் பாசனம் என்பதால், மேலும் அதிகரிக்கும்.அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணித்து, திருட்டை தடுக்க வேண்டும். பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வழியோரத்திலுள்ள, பள்ளபாளையம், போடிபட்டி, கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஊராட்சிகளில், நேரடியாக கால்வாயிலும், கரைகளிலும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.ஊராட்சிகளின் குப்பைக்கிடங்கு மற்றும் குப்பைத்தொட்டிகள் கால்வாயில் அமைந்துள்ளது. இதனால், குடிநீர், கால்நடைகளுக்கு நீர் மற்றும் பாசன நிலங்கள் கடுமையாக பாதிக்கின்றன. ஆண்டு கணக்கில் புகார் தெரிவித்தாலும், ஒன்றிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. விரைவில் குப்பை, கழிவுகள் கொட்டி கால்வாய் மூடப்படும்.உடுமலை சுற்றுப்புற விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். காய்கறி சந்தை தற்போது, மாட்டிறைச்சி, மீன் கடைகள் என இறைச்சி வளாகமாக மாறியுள்ளது. விவசாயிகள் வாகனங்கள் நிறுத்தக்கூட வசதியில்லை.வனத்திலிருந்து, 60 கி.மீ., துாரத்திலுள்ள உப்பாறு ஓடையில், நுாற்றுக்கணக்கான காட்டுப்பன்றிகள் முகாமிட்டு, பல நுாறு ஏக்கர் பயிர்களை அழித்து வருகிறது.இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. மயில், முள்ளம்பன்றி, குரங்கு, கிளி என பயிர்களை இரவிலும், பகலிலும் அழித்து வருகின்றன.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்குவதில்லை. வன விலங்குகளை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை