கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்கணும் விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை: நான்காம் மண்டல பாசனம் துவங்கும் முன், புதுப்பாளையம் கிளை கால்வாயில், முழுமையாக புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்திட்டத்துக்குட்பட்ட, புதுப்பாளையம் கிளை வாய்க்காலில், இரண்டாம் மண்டல பாசனத்தில், 7,219 ஏக்கரும், நான்காம் மண்டலத்தில், 7,310 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.பிரதான கால்வாயிலிருந்து, பூசாரிபட்டி ஷட்டரிலிருந்து பிரிக்கப்பட்டு, 40 கி.மீ., துாரத்துக்கு, கடந்த 1964ம் ஆண்டு, இந்த கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயில் இருந்து, 30 பிரிவு வாய்க்கால்கள் வாயிலாக தண்ணீர் விளைநிலங்களுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதி வழியாக செல்லும், இந்த கால்வாயை மட்டுமே அப்பகுதி விவசாயிகள், முக்கிய நீர் ஆதாரமாக கருதியுள்ளனர்.தொடர் பயன்பாடு உட்பட காரணங்களால், கால்வாய் கரைகள் சேதமடைந்து, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன், நீர் வள நில வள திட்டத்தின் கீழ், 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிக சேதமடைந்திருந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன.இருபுறங்களிலும், கரையில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் அகற்றப்பட்டு, கான்கிரீட் அமைக்கப்பட்டது. கால்வாய் முழுவதும் இப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.குறிப்பாக, கடைமடை பகுதியில், வாய்க்கால் சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால், பாசன காலங்களில் தற்போது, விரயம் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில், கரைகள் வலுவிழந்து பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தற்போது திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து நான்காம் மண்டல பாசனத்தில், இந்த கால்வாயில், 7,310 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.தற்போது, பாசனம் இல்லாத நிலையில், பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.புதுப்பாளையம் கிளை கால்வாய் கரையில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, மண் பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதை, பொதுப்பணித்துறையினர் மட்டுமல்லாது, விவசாயிகளும், கிராம மக்களும் அதிகளவு பயன்படுத்தி வந்தனர்.ஆனால், தற்போது பாதை பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால், பாதையை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.பாதையையும் புதுப்பிக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.